Fire Accident: புலம்பெயர்ந்தோர் முகாமில் பயங்கர தீ விபத்து - 39 பேர் உடல் கருகி பலி..! திட்டமிட்ட சதியா?
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து:
மெக்சிகன் நகரத்தை டெக்சாஸின் எல் பாசோவுடன் இணைக்கும் ஸ்டான்டன் சர்வதேச பாலத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள, சியுடாட் ஜுவாரெஸில் உள்ள தேசிய குடியேற்ற நிறுவனத்தில் தான் திங்கள்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, வேண்டுமென்றே சிலரால் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
39 பேர் பலி:
இதுதொடர்பாக அரசுத்தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், 39 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், முகாமில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரில் 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நோக்கத்துடன் தீ வைப்பு?
சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி தங்கவைக்கப்பட்டு இருந்த, முகாமின் கழிவறையில் இருந்து தான் தீ பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது. முகாமில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட சிறிய மோதல் காரணமாக, உள்நோக்கத்துடன் அந்த முகாம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உள்ளே சிக்கியவர்களை விரைந்து மீட்டனர்.
முகாமில் 70-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், சம்பவம் தொடர்பாக மெக்சிகோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதோடு, சம்பவ இடத்தில் புலனாய்வாளர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு:
கடந்த சில மாதங்களில், Ciudad Juarez வழியாக ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வருகின்றனர், குறிப்பாக வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான மக்கள் மெக்சிகோவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தான் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள தேசிய குடியேற்ற நிறுவனத்தில் உள்ள முகாமில் புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது பதிவாகியுள்ளது.
Ciudad Juarez அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய எல்லைப்பகுதியாகும். அங்குள்ள முகாம்கள் எல்லையை கடப்பதற்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் அல்லது அமெரிக்காவில் புகலிடம் கோரிய மற்றும் செயல்முறைக்கு காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரால் நிரம்பியுள்ளன.