நான் என் கிட்னியை வித்தாகணும்.. இல்லன்னா என்னுடைய மகனை விற்கவேண்டியதா இருக்கும் - ஆப்கன் தாய்
நான் என் சிறுநீரகத்தை விற்கவில்லை என்றால், என் மகனை விற்க வேண்டிய நிலை ஏற்படும். .கடன், என் குடும்பத்திற்கான உணவு ஆகியவற்றிற்காக எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.”
ஆப்கானிதானை தாலிபன்களை கைப்பற்றியதிலிருந்து அங்கிருக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மேலும், உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானிற்கு வழங்கி வந்த அனைத்துவிதமான உதவிகளையும் நிறுத்தியது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வேலைகளை இழந்தனர். உணவுத்தட்டுபாடு அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். மக்கள் தங்கள் குழந்தைகளை விற்றும், தங்களின் உடல் உறுப்புகளை விற்றும் பசியைத் தீர்க்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தாலிபன்கள் கடந்த ஆண்டு 2021, ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதனால் உலக நாடுகளிடமிருந்து நிதி உதவிகள், வர்தக உறவு, முதலீடுகள் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதையெடுத்து, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையிழப்பு, உணவுப் பஞ்சம் உள்ளிட்ட பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களையெல்லாம் விற்பனை செய்துச் சாப்பிட்டு வந்தனர். பலர் குழந்தைகளை விற்பனை செய்யும் பரிதாபமும் நிகழ்ந்தேறியது. இந்நிலையில் தங்கள் குடும்பத்திற்கு உணவு வேண்டும் என்பதற்காக சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கும் நிலைமை மோசமாகியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் வாழும் 95 சதவிகித மக்கள் போதுமான உணவின்றி தவிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசம். லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளர். பல லட்ச குழந்தைகள் பட்டியால் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் பகுதியில் மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகத்தை விற்று தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள மேற்கு மாகாணங்களில் பட்டினியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள உடல் உறுப்புகளை விற்பது அதிகரித்து வருகிறது. இதற்கு ‘ஒரு சிறுநீரக கிராமம்’ (one kidney village) என்ற பெயர் உருவாகியுள்ளது. வேலையின்மை காரணமாக இவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்காலிக தீர்வாக தங்களது சிறுநீரகத்தை விற்று வருவதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
ஒரு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு 1500 டாலர் தருகிறார்கள். வளர்ந்த நாடுகளில் உடல் உறுப்பு விற்பனை சட்டத்திற்கு எதிரானது என்றாலும், ஆப்கானிஸ்தானில் இதற்கென விதிகள் ஏதும் இல்லை. ஆனால் மக்கள் தங்களது ஒரு நாளை கடப்பதற்கு தேவை இருப்பதால், தங்கள் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் சோகம் நிகழ்ந்து வருகிறது.
ஹெராத் பகுதியைச் சேர்ந்த நூருதீன் தனது குடும்பத்தை வறுமையின் கோரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தனது சிறுநீரகத்தை விற்றார்.
”நான் என் சிறுநீரகத்தை விற்கவில்லை என்றால், என் மகனை விற்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் என் சிறுநீரகத்தை விற்கு துணிந்தேன்.கடன், என் குடும்பத்திற்கான உணவு ஆகியவற்றிற்காக எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எனக்கு வருத்தமாகவும் இருக்கிறது. என்னால் இனி எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. எனக்கு வலி இருக்கிறது. என்னால் கனமான பொருட்களை தூக்க முடியாது.” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அவரது குடும்பம் பணத்திற்காக தங்கள் 12 வயது மகனையே நம்பியுள்ளது. சிறுவன் ஒரு நாளைக்கு 70 செண்ட்களுக்காக ஷூக்களை பாலிஷ் செய்யும் வேலை செய்கிறார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களும் தங்கள் கணவ்ர் வேலை செல்லவில்லை, குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும் என்பதாலும் தங்களது உடல் உறுப்புகளையும் விற்று வருகின்றர். உடல் உறுப்பு அறுவை சிகிக்கையின்போது, உடல் உறுப்பு கொடுப்பவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் வாங்கப்படுகிறது. ஆனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் ஏதும் சேகரிக்கப்படுவதில்லை.
இவர்களின் வறுமை ஒழிய உலக நாடுகள் உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.