Elon Musk : எனக்கே விபூதியா? ட்விட்டரின் ஆயுதத்தால் திருப்பித்தாக்கும் எலான் மஸ்க்! உச்சத்தில் வழக்கு போர்
ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை, மற்றும் நடைபெற்ற எல்லா பரிவா்த்தனைகளையும் ரத்து செய்யும் உரிமை என எல்லா உரிமைகளும் எலன் மஸ்க் வசம் வந்துள்ளது
உலக பணக்காரர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக அண்மையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டாா். கடந்த ஏப்ரல் மாத பங்கு நிலவரப்படி 3,42,000 கோடி ரூபாய் (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக வாங்குவதற்கு ஒப்பந்தமானது. அதற்கு முன்பே ட்விட்டரின் அதிகபட்ச ஷெரை எலான் மஸ்க்தான் வைத்திருந்தார். 9 சதவீத பங்குகளை வைத்திருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா்.
போலிக்கணக்குகள் சர்ச்சை
அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழுமையான புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டி எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா். ஆனால் ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலி கணக்குகள் மட்டுமே இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. "இந்த எண்ணிக்கை நம்பும்படி இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும்" எனக் கூறி ஒப்பந்தத்தை மஸ்க் நிறுத்தி வைத்தாா்.
ஆதாரம் வேண்டும்
"ட்விட்டரில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவே போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை 5 சதவீதத்திற்கு குறைவான போலி கணக்குகள் மட்டுமே உள்ளதென்றால், அதற்கான ஆதாரத்தை, ட்விட்டா் சிஇஓ பொதுவெளியில் வெளியிட வேண்டும்", என்று எலான் மஸ்க் தரப்பில் கேட்கப்பட்டது. அதையும் ட்விட்டா் ஏற்கவில்லை, "சிஇஓ நாங்கள் கேட்டதை செய்யாதவரையில் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது", என்றும் எலான் மஸ்க் கூறினாா்.
ஒப்பந்த விதிமுறை மீறல்
இந்த நிலையில், எலான் மஸ்க் வழக்கறிஞர்கள் சாா்பில் ட்விட்டா் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. அதில், "எலான் மஸ்க் கோரிய போலி கணக்கு விவரங்களை ட்விட்டா் நிறுவனம் தர மறுப்பது, கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் ஒப்பந்தத்தின் கீழான தகவல் பெறும் உரிமையை பறிக்கும் செயலாகும். இதன் மூலமாக கையகப்படுத்தல் ஒப்பந்த நடைமுறைகளை ட்விட்டா் நிறுவனம் மீறியுள்ளது தெரியவருகிறது. அந்த வகையில், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை, மற்றும் நடைபெற்ற எல்லா பரிவா்த்தனைகளையும் ரத்து செய்யும் உரிமை என அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க் வசம் வந்துள்ளது", என தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தை ரத்து செய்த மஸ்க்
இந்தச் சூழலில் ட்விட்டா் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான மஸ்க் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அறிவித்தாா். இதனை தொடர்த்து மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது ட்விட்டர் நிறுவனம். தற்போது புதிதாக ஒரு ஐந்து நாள் சோதனை ஓட்டத்திற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் ட்விட்டரை மஸ்கிடம் ஒப்படைட்க்கும் ஒப்பந்தத்தில் இருவருக்குமே கிட்டத்தட்ட சமரசம் என்றாலும் இருவரும் அடுத்தவர்கள் மீது புகார் கூறிக்கொண்டுதான் உள்ளனர்.
இருபுறமும் குற்றச்சாட்டு
இந்த வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத பெரிய அளவிலான தரவுகளை எலான் மஸ்க் கேட்கிறார் என்று ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது ஒப்பந்த விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டும் நிலையில், இது வரை மஸ்க் கேட்ட தரவுகளை ட்விட்டர் நிறுவனம் தராததால் அவர்கள்தான் ஒப்பந்த விதிகளை மீறுகிறார்கள் என்று மஸ்க் ட்விட்டரை கைகாட்டுகிறார்.
டெலாவேர் வழக்கு
"இந்த உத்தரவு, பெரிய தரவுத் தொகுப்புகளுக்கான கோரிக்கைகளின் உரிமை உட்பட, எந்த சர்ச்சைகளையும் தீர்க்காது," என்று மெக்கார்மிக் கூறினார். ஏற்கனவே டெலாவேரில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி ஒரு வார கால விசாரணையை மஸ்க் எதிர்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்