Trump Vs India Pak. Clash: மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழக்கமாக சொல்வது போரடித்து விட்டதால், இந்த முறை புதிதாக ஒரு தகவலை சேர்த்துள்ளார். அது என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்ட நிலையில், தற்போது அதில் ஒரு தகவலை கூடுதலாக்கியுள்ளார். சமீபத்தில் அது குறித்து பேசியுள்ள அவர், ஏற்கனவே கூறிவந்த சுடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை கூட்டியுள்ளார். அப்படி எவ்வளவு தான் அதிகரித்துள்ளார்.? வாருங்கள் பார்க்கலாம்.
8 விமானங்கள் சுடப்பட்டதாக புதிய தகவல் கூறிய ட்ரம்ப்
புளோரிடாவின் மியாமியில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், தனது கூற்றுக்களில் புதிய விவரங்களை சேர்த்துள்ளார். தான் பதவியேற்ற 9 மாதங்களில் 8 போர்களை நிறுத்தி, பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறிய அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார். அந்த மோதலின் போது, மொத்தம் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் புதிய தகவலை கூறியுள்ளார். ஏனென்றால், ஏற்கனவே அவர் 6 விமானங்கள் என்று தான் கூறிவந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரு நாடுகளுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்தோம். அப்போது அவர்களது மோதல் குறித்து தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் போருக்கு தயாராவதாக கேள்விப்பட்டேன். அதனால், இரு நாட்டு தலைவர்களுடன் பேசினேன். அப்போது, இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அவர்களுடன் வர்த்தகம் ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டேன் என்று கூறினேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவும் பாகிஸ்தானும் அதிர்ச்சி அடைந்தன“
அவரது இந்த எச்சரிக்கை இரு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறிய ட்ரம்ப், இரு நாடுகளும் வேண்டாம், இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், “இதற்கு சம்பந்தம் உண்டு, நீங்கள் அணுசக்திகள், நான் உங்களுடன் வர்த்தகம் செய்யவில்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் போரில் ஈடுபட்டால், நாங்கள் உங்களுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்ய மாட்டோம்“ என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் கடந்த மே மாதம் 9-ம் தேதி தான் பேசியதாகவும், அதற்கு அடுத்த நாளே, அதாவது மே 10-ம் தேதியே இரு நாடுகளும் தன்னை அழைத்து, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாகவும், அனைத்து சண்டைகளையும் நிறுத்துவதாக அறிவித்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதன் பிறகு, நன்றி, நாம் தொடர்ந்து வர்த்தகம் செய்யலாம் என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். மேலும், இது சிறப்பான விஷயம் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கட்டணங்கள் தான் இதை செய்தன, கட்டணங்கள் இல்லாமல், அது(போர் நிறுத்தம்) ஒருபோதும் நடந்திருக்காது என்றும் கூறிய நிலையில், அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்கள் எழுந்துள்ளன.
ஆனால், இந்தியாவின் தெடர் மறுப்புக்கு மத்தியிலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது குறித்து 50-க்கும் மேற்பட்ட முறைகள் பேசிவிட்ட பிறகு, தற்போது சுடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். இதுவும் உருட்டுதான் என்றாலும், அதற்கும் ஒரு அளவு வேண்டாமா என்று தான் கேள்வி எழுகிறது.
இந்த முறையும், யாருடைய விமானங்கள் என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்நிலையில், இதற்கு இந்தியா இப்போது என்ன பதில் தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான பதிலை கொடுத்தால் சரி...





















