Donald Trump Ban : நிம்மதி பெருமூச்சு விடும் டிரம்ப்...முடிவுக்கு வரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்க தடைகள்
பேஸ்புக்கை பொறுத்தவரையில், டிரம்புக்கு 34 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி சார்பில் போட்யிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அப்போது, ஜோ பைடனுக்கு எதிராக டிரம்பின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதன் விளைவாக, அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இது, அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாக மாறியது.
இந்த தாக்குதல்களின் போது சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் 8 கோடி பேரால் பின்தொடரப்பட்டு வந்த டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அவரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.
இதனால், ட்விட்டர், பேஸ்புக் போன்றவைகளுக்கு போட்டியாக டொனால்டு டிரம்ப் புதிதாக 'Truth' என்னும் புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தினார்.
இச்சூழ்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தி டிரம்பின் ட்விட்டர் பக்கத்தின் மீதான தடையை திரும்ப பெற்றார். இருப்பினும், அவர் இதுவரை ட்விட்டரில் எந்த பதிவையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீது விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தடையும் முடிவுக்கு வருகிறது. வரும் வாரங்களில், அவரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீதான தடை விலக்கி கொள்ளப்படும் என அதன் தாய் நிறுவனமான மெடா அறிவித்துள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என டிரம்ப் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், அவரின் சமூக வலைதளங்கள் மீதான தடை விலக்கி கொள்ளப்படும் என வெளியாகியுள்ள அறிவிப்பு அவருக்கு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது.
பேஸ்புக்கை பொறுத்தவரையில், டிரம்புக்கு 34 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர். பிரச்சாரம் செய்தவற்கும் நிதி திரட்டுவதற்கும் இவ்விரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
டிரம்பின் சமூக வலைதளங்கள் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஒரு அதிபர் வேட்பாளராக அவர் தெரிவிக்கும் கருத்து மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும். எனவே, இந்த தடை திரும்ப பெறப்பட்டிருப்பது சரியான முடிவு என கூறுகின்றனர்.
ஆனால், விதிகளை மீறி மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரம் செய்ததாலேயே அவரின் பக்கம் முடக்கப்பட்டது. எனவே, இந்த முடிவு பெரும் பிரச்னையை கிளப்பும் என எச்சரிக்கின்றனர்.