மர்மமாக இறந்த முதியவர்.. வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பாம்பு வீடு!
இறந்த நபரை சுற்றி 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உட்பட 125க்கு மேற்பட்ட விஷ பாம்புகள் உயிருடன் இருந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் 49 வயது நபர் இறந்து கிடந்துள்ளார். இறந்துகிடந்த நபரை வீட்டில் இருந்து மீட்க முயற்சி செய்தபோது குறைந்தது அவரை சுற்றி 125 பாம்புகள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டியில் வசித்துவந்த 49 வயது முதியவர் இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமலும், வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்த முதியவர் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அந்த நபரை சுற்றி 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உட்பட 125க்கு மேற்பட்ட விஷ பாம்புகள் உயிருடன் இருந்துள்ளது.
தொடர்ந்து, அந்த நபரை மீட்டு பரிசோதனை நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் தனது வீட்டில் மலைப்பாம்பு, பாம்பு, நாகப்பாம்பு, கருப்பு மாம்போ உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகளை வளர்த்து வந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாம்புகளை பிடித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்பு, கவுண்டியின் தலைமை விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி காவல்துறைக்கு அளித்த தகவலில், 'தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். வட கரோலினா மற்றும் வர்ஜீனியாவைச் சேர்ந்த பாம்பு நிபுணர்களின் உதவியுடன், சார்லஸ் கவுண்டி அனிமல் கன்ட்ரோல் பாம்புகளை மீட்டனர். சுற்றுப்புறத்தில் வசிப்போர் பாம்புகள் குறித்து பயப்பட தேவையில்லை. அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேரிலாந்து சட்டத்தின்படி, பாம்பை வீட்டில் யாரும் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் பால்டிமோரில் உள்ள தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது மறைவில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்