Covishield Side Effects: கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவு.. ஒப்புக்கொண்ட நிறுவனம்.. பகீர் கிளப்பும் அறிக்கை..!
Covishield Vaccine: கோவிஷீல்ட் தடுப்பூசியால், மிக அரிய நிகழ்வுகளில் பக்க விளைவு இருப்பது உண்மைதான் என கண்டுபிடிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AstraZeneca: கோவிஷீல்ட் தடுப்பூசியானது, மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் தன்மையை ஏற்படுத்தும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிஷீல்ட் வழக்கு:
அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. இந்த தடுப்பூசியானது, கோவிஷீல்ட் மற்றும் வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் உலகளவில் விற்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில், ஏப்ரல் 2021 அன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியானது, இறப்புகளையும் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது, கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் அறிக்கையில், அரிதான நிகழ்வுகளில் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பக்க விளைவுகள்:
கோவிஷீல்ட் தடுப்பூசியால் மிக அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் தன்மையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்றும் அழைக்கப்படுகிறது.
இரத்தம் உறைதல் ஏற்பட்டால், ரத்த ஓட்டமானது பாதிக்கும் சூழல் உருவாகும், பிளேட் செல் குறைந்தால், இரத்த வெளியேற்றத்தின்போது கட்டுப்படுத்தும் தன்மையானது குறையும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்று, தடுப்பூசிகளை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா:
ஏப்ரல் 2021 இல் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்பவரால் இந்த வழக்கு தொடரப்பட்டது. UK உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணங்களில், AstraZeneca அதன் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS ஐ ஏற்படுத்தும்" என்று ஒப்புக்கொண்டது.
இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்தில் Oxford-AstraZeneca தடுப்பூசியானது, தற்போது பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், சில தனிநபர் ஆய்வுகளில், இந்த தடுப்பூசி தொற்றுநோயைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தது எனவும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தடுப்பூசிக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன எனவும் சர்வதேச செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )