எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
அமெரிக்காவில் டெக்சாஸில் மாகாணத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அதையடுத்து வாஷிங்டன் நகருக்கு சென்று, புலம்பெயர் இந்தியர்களை சந்திக்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தை இன்று தொடங்கினார். டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகருக்கு சென்றடைந்த அவருக்கு புலம்பெயர் இந்தியர்களும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் (ஐஓசி) உறுப்பினர்களும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
யாரை சந்திக்க போகிறார் ராகுல் காந்தி?
அமெரிக்காவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் வெளியிட்டுள்ளார். அதில், "அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பால் நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இந்த பயணத்தின் போது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நுண்ணறிவுமிக்க உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, குறிப்பிடத்தகுந்த இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான பிறகு, ராகுல் காந்தி முதல்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம்:
ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்து தகவல் வெளியிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, "வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், ஊடகத் துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர், ராகுல் காந்தியை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். அவருடன் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
कांग्रेस के पूर्व अध्यक्ष और लोकसभा में विपक्ष के नेता राहुल गांधी अमेरिका के डलास पहुंच गए हैं। यह विपक्ष के नेता के तौर पर राहुल गांधी का पहला अमेरिका दौरा है। #RahulGandhi #America pic.twitter.com/jj04GAK9Sc
— With Rahul Gandhi (@amitsri32137925) September 8, 2024
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை மற்றும் புனே போன்ற தொழில்நுட்ப நகரங்களில் அமெரிக்கர்களுக்கு ஆர்வம் இருப்பதால், பல்வேறு நபர்களுடன் பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. வணிகம் மற்றும் தொழில்நுட்ப சமூகத்துடன் உரையாடுவதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறோம்" என்றார்.