ஓஹ்! குவாரண்டைன் பண்ணமாட்டீங்களா.. வீட்டில் வைத்து பூட்டிய அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
கொரோனா தனிமைப்படுத்தலை மீறும் நபர்களை வீட்டில் வைத்து அதிகாரிகள் பூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொற்று பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்துள்ளனர். அத்துடன் கொரோனா தொற்று பாதிப்பு பல்வேறு நாடுகளில் பொருளாதார ரீதியிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று இன்னும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதன்காரணமாக அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை தீவிரமாக தனிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறுவது வாடிக்கையாகி வருவதாக புகார் எழுந்தது. மேலும் அப்படி தனிமைப்படுத்திப்பட்டவர்கள் விதிகளை மீறினால் அவர்களை அதிகாரிகள் வீட்டிற்குள் வைத்து அடைப்பதாக செய்திகள் பரவி வந்தன.
透气的大爷,遭到封门。pic.twitter.com/neSSIVeqEH
— 习近彭 (@wakeupfrog01) August 9, 2021
இதுதொடர்பாக தைவான் செய்தியாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனிமைப்படும் விதிகளை மீறும் ஒருவரை அதிகாரிகள் வீட்டிற்குள் வைத்து பூட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஒரு இரும்பு ராடை வைத்து அந்த வீட்டை பூட்டுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 1-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் அந்த முழு அடுக்குமாடி குடியிருப்பும் 14 நாட்களுக்கு முழுவதும் மூடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மீண்டும் டெல்டா வைரஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களிடம் அதிகமாக இந்த வகை வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாஞ்சிங் என்ற பகுதியில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மீண்டும் சீனாவில் பல பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நகரங்களில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆகவே கொரோனாவை மீண்டும் கட்டுபடுத்த அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கோல்ப் மைதானத்தில் விளையாடிய குட்டிக் கரடிகள்; 2 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரல்!