கொரோனா ரிப்போர்ட்டிங் செய்ததற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்... வலுக்கும் போராட்டம்
2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெருந்தொற்றின் மையப்புள்ளியான வூஹான் மாகாணத்திற்கு பயணம் செய்து, பெருந்தொற்றை அதிகாரிகள் கையாள்வது குறித்து கேள்வியெழுப்பினார்.
2020 ஆண்டு கோவிட் பெருந்தொற்று ஆரம்பித்தக் காலத்தில் சீனாவின் வூஹானிலிருந்து செய்தியை ரிப்போர்ட் செய்த பத்திரிகையாளர் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் இறக்கும் தருவாயில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் வேதனைத் தெரிவித்துள்ளனர். அவரை உடனே சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
38 வயதான சேங் சேன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெருந்தொற்றின் மையப்புள்ளியான வூஹான் மாகாணத்திற்கு பயணம் செய்து, பெருந்தொற்றை அதிகாரிகள் கையாள்வது குறித்து கேள்வியெழுப்பினார். அது குறித்து தன்னுடைய போனிலும் ரெகார்ட் செய்தார். இந்நிலையில் பிரச்சினைகளைத் தூண்டியதாக 2020ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டிசம்பர் மாதம் அவருக்கு 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சாங், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மூக்கின் வழியேதான் உணவு செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சேங் சேனால் தற்போது மற்றவர்களின் உதவியில்லாமல் நடக்கவோ தலையைக் கூட தூக்கவோ முடியவில்லை என உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவதாகவும், நெடு நாட்களுக்கு வாழமாட்டார், வரும் குளிர்காலம் வரைக்கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்றும் அவரது சகோதரர் சாங் ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் பதிவிட்டார்.
அவரது ட்விட்டர் பதிவுக்கு பிறகு பலரும் சேங் சேனிற்காக தங்களது குரல்களை எழுப்பி வருகின்றனர். அவரை உடனே சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்றும் அவருக்கு தற்போது தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அவரின் கைது மனித உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் என்றும் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சேங் சேனின் நண்பர்கள் சிறை நிர்வாகத்திடம் பேச முயன்றபோதும் அவர்கள் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சீன அரசும் சேங் சேனின் உடல்நிலைக் குறித்து எதுவும் சொல்லவில்லை. இது சீனாவிற்கு எதிரான அரசியல் சூழ்ச்சி என தெரிவித்து அழைப்புகளை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சீனா சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட நாடு. சட்டத்தை மீறும் யாருக்கும் தண்டனை விதிக்கப்படும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேங் சேன் தனது கடமையைதான் செய்ததாகவும் அதற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வுஹானிலிருந்து ரிப்போர்ட் செய்ததற்காக சீனாவில் ஏற்கெனவே 3 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.