China Warns: அமெரிக்கா பேச்ச கேட்டுட்டு ஆடுனீங்கன்னா அவ்ளோதான்.. சீனாவின் எச்சரிக்கை யாருக்கு.?
அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு, தங்களுடன் வர்த்தகத்தை குறைக்கும் எண்ணம் இருந்தால், அதை உடனே கைவிடும்படி மற்ற நாடுகளை சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில், வரிச் சலுகை பெறும் வகையில், அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு, தங்களுடனான வர்த்தகத்தை குறைக்கும் எண்ணம் கொண்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உச்ச கட்டத்தில் இருக்கும் அமெரிக்க-சீன வர்த்தகப் போர்
அமெரிக்கா மற்றும் சீனா, போட்டி போட்டுக்கொண்டு பரஸ்பர வரிகளை விதித்து, தற்போது அமெரிக்கா 245 சதவீதம் மற்றும் சீனா 125 சதவீதம் என பரஸ்பர வரிகளை விதித்துக்கொண்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை தவிர்த்து, மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டி வருகிறார். தாங்கள் நம்பகமான வர்த்தக நண்பனாக இருப்போம் என அந்நாடுகளுக்கு சீன அதிபர் உறுதியளித்து வருகிறார்.
இந்த சூழலில், குறுக்கு வழியில் யோசிக்கும் அமெரிக்காவோ, மற்ற நாடுகளுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்றால், சீனா உடனான வர்த்தகத்தை குறைக்கும்படி ட்ரம்ப் கூறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சீனா ஆத்திரத்தில் உள்ளது.
வரியை நிறுத்தி வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ட்ரம்ப்
இதனிடையே, அதிகப்படியான வரி விதிப்பால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் பெரிய அளவில் நஷ்டங்களை சந்தித்ததால், ஆபத்தை உணர்ந்த ட்ரம்ப் அரசு, சீனா தவிர்த்து, மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்துவிட்டு, பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
சீனாவிற்கான வரி 145 சதவீதமாக உள்ள நிலையில், சில பொருட்கள் மீதான வரி மட்டும் 245 சதவீதமாக உள்ளது. இதனால், சீனாவும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
சீனா விடுத்த எச்சரிக்கை
அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், அதிலிருந்து விடுபடுவதற்காக, அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், வரியை குறைக்க அமெரிக்க அதிபர் விடுக்கும் நிபந்தனை, சீனா உடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும் என்பதுதான் என கூறப்படுகிறது. இதனால், வரிச்சுமையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதை கேட்பதுதான் ஒரே வழி.
இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனாவுக்கு எதிராக செயல்படக் கூடாது என ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒத்துப்போவது அமைதியை தராது. சமரசம் செய்துகொள்வது மரியாதையை தராது.. மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்தாமல், தற்காலிகமாக சுயநலத்தை தேடுவது, புலியின் தோலை தேடுவது போன்றது என்று சீன வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
சீனாவின் நலனை கருத்தில் கொள்ளாமல், அமெரிக்காவுடன் நாடும் ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்பதாக கூறியுள்ள சீன அரசு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு தக்க எதிர்வினையாற்றப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

