தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்தக்கூடாது என கனடாவில் வலுக்கும் போராட்டம்.. ரகசிய இடத்திற்கு சென்றார் பிரதமர் ஜஸ்டின்!
கனடா பிரதமருக்கு எதிரான கடுமையான மற்றும் ஆபாசமான வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
கனடாவில் கட்டாய தடுப்பூசி ஆணைக்கு எதிராக ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்திவருவதால் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்பின்மையின் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முடிந்தப்பாடில்லை. முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மாறுபட்ட கொரோனா வைரஸ் என பல வடிவங்களில் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் பிரதமர்களும் அந்நாட்டின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கனடாவில் கொரோனா தாக்கம் அதிகரித்தமையால், அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஆணைப்பிறப்பித்தது. அதன்படி மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இதோடு கனடா நாட்டில் உள்ள ட்ரக் ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும், இல்லாவிடில் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு தான் தற்போது கனடாவில் பிரச்சனை பூதாகரமாக வெடிப்பதற்கு காரணமாயிற்று. தடுப்பூசி செலுத்திக்கொள்வது எங்கள் உரிமை என்றும், எப்படி எங்களது உரிமையை நீங்கள் பறிக்க முடியும்? இதுப்போன்ற சட்டங்கள் போட்டால் லாரி ஓட்டுநர்களான எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற பெயரில் தலைநகர் ஓட்டாவில் போராட்டம் நடத்தினர். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தமையால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தினர்.
இதோடு கனடாவில் காவல்துறை பாதுகாப்பையும் மீறி அத்துமீறி நுழைந்தனர். கனடா பிரதமருக்கு எதிரான கடுமையான மற்றும் ஆபாசமான வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். அங்குள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் நடனமாடும் காட்சிகளும் தற்போது வெளியாகிவருகிறது. இந்நிலையில் தான் இராணுவ அதிகாரிகள் இதுப்போன்று வன்முறை சம்பங்களில் ஈடுபடவேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் போராட்டக்காரர்கள் செவிமடுக்கவில்லை.
இதனால் கனடாவில் அசாதாரணமான சூழல் நிலவியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தப்போதும் பாராளுமன்ற வளாகத்திற்கும் நடைபெறும் போராட்டத்தை மக்கள் கைவிட்டப்பாடில்லை. எங்களது உரிமைகளை பறிக்கும் ஆணையை மீண்டும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். இதனால் கனடாவில் பதட்டான சூழல் ஏற்பட்டுவதால், அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.