Canada Parliament: ‛சர்வதேச அளவில் ஈழத்தமிழருக்கு முதல் வெற்றி ’ யாரும் செய்யாததை துணிந்து செய்த கனடா!
Tamil Genocide Remembrance Day: இதுவரை, எந்தப் பாதிப்பிற்கும் இலங்கை அரசு தீர்வு காணவில்லை, கண்கட்டி வித்தை மூலம், நல்லிணக்கம் என்ற பெயரில் சர்வதேசங்களையும் ஏமாற்றுகிறது எனக் குற்றச்சாட்டு உள்ளது.
போர் என்ற பெயரில் நடைபெற்ற உச்சக்கட்ட மனித உரிமை மீறலுக்கும் பலியான பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்கும் நீதி கோரி போராடும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. அதுவும், கனடா நாடாளுமன்றத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த வெற்றி, இருட்டில் இருந்து வெளியே வருவதற்கான முதல் வெளிச்சம் என பார்க்கப்படுகிறது.
மே 18-ம் தேதி, இனப்படுகொலை நாளாகவும் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தல் நாளாகவும் முள்ளிவாய்க்காலில் 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்களால் மட்டுமே அனுசரிக்கப்பட்டு வந்த இந்த நாளில், இம்முறை கொழும்புவில் சிங்கள இனத்தவரும் பங்கேற்று, உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வுகள், இலங்கை மக்களிடையே மாற்றம் ஏற்படுவதைச் சுட்டிக் காட்டியது.
இந்நிலையில், வரும் ஆண்டு முதல், மே மாதம் 18-ம் தேதியை, தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து ஆண்டுதோறும் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும் என கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடா நாட்டு எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி கொண்டு வந்த இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில், நாடாளுமன்ற அறிவிப்பின் மூலம் தமிழர் இனப் படுகொலையை ஏற்றுகொண்டுள்ள முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜக்கிய நாடுகள் சபையோ அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையோ, இனப்படுகொலை எனக்கூறாத நிலையில், கனடா அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இலங்கை மட்டுல்ல, உலகெங்கும் வாழும் தமிழ்க்குடிகள், கனடாவின் அறிவிப்பை வரவேற்று உள்ளனர். உலக நாடுகளின் பார்வையை மாற்றுவதற்கும் கனடாவைப் பின்பற்றி மற்றநாடுகளும் ஈழத் தமிழரின் துயர் துடைக்க முன் வருவதற்கும் இது ஒரு உந்துகோலாக இருக்கும் எனக் கருதுகின்றனர்.
அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால், பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது இலங்கை. இந் நேரத்தில், தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என இலங்கை நாட்டின் முப்பெரும் இனமும் நாட்டை சீரமைக்க ஒன்றுக்கூடி களமிறங்கி உள்ளனர். இந் நிலையில், தமிழினப்படுகொலையை, சர்வதேச அளவில் முக்கியமான நாடுகளில் ஒன்றான கனடா நாட்டின் நாடாளுமன்றம் அங்கீகரித்து, அது தொடர்பான முன்னெடுப்புகளைச் செய்வோம் எனக் கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் மூலம் பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டும், இதுவரை, எந்தப் பாதிப்பிற்கும் இலங்கை அரசு தீர்வு காணவில்லை, கண்கட்டி வித்தை மூலம், நல்லிணக்கம் என்ற பெயரில் சர்வதேசங்களையும் ஏமாற்றுகிறது எனக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தச்சூழலில்தான், தற்போது கனடா நாட்டு அரசாங்கம், இலங்கையின் இனப்படுகொலையை அங்கீகரித்துள்ளது. இது ஈழத்தமிழர் பட்ட ரணங்களுக்கு ஆறுதல் தரும். ஆனால், ரணத்தைக் குணமாக்க வேண்டுமென்றால், பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுத் தர சர்வதேசங்களும் கனடா அரசாங்கம் போல் முன்வர வேண்டும் என்பதே தீர்வாகும்.