அரியவகை கோளாறால் எப்போதுமே சிரிக்கும் குழந்தை..! சோஷியல் மீடியாவின் செல்லமான கதை..
அய்லா சம்மர் முச்சா என்ற பெயரிடப்பட்ட அந்தக்குழந்தையின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பதாக பெற்றோர் நினைத்தனர்.
குழந்தை என்றாலே எல்லாருக்குமே அலாதி பிரியம்தான். பற்கள் முளைக்காத பொக்கை வாயை மெல்ல விரித்து அவ்வப்போது சிரிக்கும் குழந்தைக்காக பெற்றோர் காத்துக்கிடப்பார்கள். எங்கே சிரி.. சிரி.. என அந்தக்குழந்தையை படாதபாடு படுத்திவிடுவார்கள். பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும் குழந்தையின் சிரிப்பு இங்கே ஒரு குழந்தைக்கு நிரந்தரமாகவே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு குழந்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அய்லா சும்மர் முச்சா..
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அய்லா சம்மர் முச்சா என்ற பெயரிடப்பட்ட அந்தக்குழந்தையின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பதாக பெற்றோர் நினைத்தனர். குழந்தையில் வாயின் இரு முனைப்பகுதியும் சரியாக இணையாமல் இருந்துள்ளது. குழந்தை வளர வளர இது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது. மருத்துவ உலகில் இந்தப்பிரச்னைக்கு Bilateral Microstomia என்று பெயரிடப்பட்டுள்ளது. வாய்ப்பகுதியின் இரு முனையும் சரியாக இணையாத நிலையில் அந்தக்குழந்தையைப் பார்த்தால் எப்போதுமே புன்னகைப்பது போலவே இருக்கிறது.
ஒருபுறம் இந்த பிரச்னைக்காக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் தன் குழந்தையின் பிரச்னை குறித்து டிக் டாக்கில் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். டிக் டாக் மூலம் ஏதேனும் சிகிச்சை முறைகள் அல்லது வேறு குறிப்புகள் கிடைக்கலாம் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் டிக் டாக் வீடியோ மூலம் தற்போது அய்லா உலகம் முழுவதும் செல்லக்குழந்தையாக மாறியுள்ளது. நிரந்தர புன்னகையுடன் இருக்கும் அய்லாவுக்கு பலரும் க்யூட் ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர். அதேவேளையில் குழந்தைக்கான சிகிச்சை குறித்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
14 பேர்..
Bilateral Microstomia என்ற இந்த குறைபாட்டால் குழந்தையின் வாய்ப்பகுதி சற்று பாதிக்கப்படுகிறது. கர்ப்பத்தில் இருக்கும் போது ஒரு கரு குழந்தையாக மாறுகிறது. அப்போது ஒவ்வொரு உறுப்புமே முழுமையாக உருவாகின்றன. அப்படி வாய்ப்பகுதி முழுமையடையாமல் இரு கார்னர் பகுதியில் ஒட்டாமல் இருப்பதே இந்த குறையாகும். உலகளவில் இந்த பிரச்னையால் 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள குழந்தையின் தாயார், ''நான் என்னுடைய கர்ப்பகாலத்தில் மிகவும் பாதுகாப்பாகவே இருந்தேன். குழந்தை இப்படி பிறக்க நான் என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை. இதில் என் தவறு என்னவென தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்