அமெரிக்காவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவி.. உறுப்பு தானத்துக்கு முன்வந்த பெற்றோர்.. நெகிழ்ச்சி சம்பவம்..
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த இந்திய மாணவி மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த இந்திய மாணவி மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் 'அஸ்ட்ரோவேர்ல்டு' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகரான ட்ராவிஸ் ஸ்காட் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை மே மாதம் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் அண்மையில் நடந்த இந்நிகழ்ச்சியைக் காண அரங்கில் 50,000 பேர் திரண்டிருந்தனர்.
ட்ராவிஸ் ஸ்காட்டைப் பார்க்க ரசிகர்கள் மேடையை நோக்கி நெருங்கினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களின் போக்கைப் பார்த்து ட்ராவிஸ் ஸ்காட் நிகழ்ச்சியை நிறுத்தினார். ஆனால் அதற்குள் கூட்டம் கட்டுப்பாடின்றி அங்குமிங்கும் ஓடியது. இதில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் இறுதிச் சடங்கு செலவை ஏற்றுக் கொள்வதாக ட்ராவிஸ் ஸ்காட் அறிவித்துள்ளார். நிகழ்ந்த சம்பவம் தனக்கு பேரதிர்ச்சியையும் பெருந்துக்கத்தையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோர்:
5 நாட்களாக வென்டிலேட்டார் உதவியுடன் உயிர் வாழ்ந்துவந்த மாணவி பாரதி சஹானி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். உடனே அவரின் பெற்றோர் சற்றும் தயங்காமல் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாரதியின் தாயார் உடைந்து அழுத சம்பவம் காண்போரை உருகச் செய்தது. என் மகள் எனக்குக் கிடைத்த வரம். அந்த வரமின்றி நான் இனி எப்படி உயிர் வாழ்வேன். என் உள்ளம் இப்போது வெறுமையாக இருக்கிறது. என் குழந்தை எனக்குத் திரும்ப வேண்டும் என்று கதறி அழுதார். பாரதியின் தந்தை சன்ன சஹானி கூறும்போது, பாரதி எங்கள் குடும்பத்தின் தேவதை. அவள் இல்லாத வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமே இல்லை என்றார். அதே வேளையில் தன் மகளின் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரைக் காப்பாற்றப் போவதாகக் கூறினார்.
பாரதி குடும்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் இந்த விபத்துக்குப் பொறுப்பு. மக்களின் பாதுகாப்பை விட லாபத்தைக் குறிவைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. நிச்சயமாக இதற்கு நீதி கிடைக்கப் போராடுவோம் என்றார்.
ஆஸ்ட்ரோவேர்ல்டு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் அமெரிக்க மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் 21 வயதே ஆன மாணவி பாரதி சஹானியின் மறைவு அவரது குடும்பத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.