Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸின் பூமிக்கு திரும்பும் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக, போயிங் ஸ்டார்லைனர் நிறுவனம் அறிவித்துள்ளது.
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அடுத்தடுத்து சில கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக பணியாளர்களுடன் சேர்ந்து பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொடர்ந்து கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 26-ம் தேதி (இன்று) பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்பான ஆய்வு தொடர்வதால், பூமிக்கு திரும்புவதற்கான சுனிதா வில்லியம்ஸின் பயணம் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 7ம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ் தலைமையிலான குழு, ஒரு வார கால ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்பவதாக திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறுகள்:
அட்லஸ் 5 ராக்கெட் மற்றும் கவுண்ட்டவுன் கணினி செயலிழந்ததால் திட்டமிடப்பட்ட பயணத்தில் தாமதம் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்ட பிறகு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்கியது. இருப்பினும் முதல் முயற்சியிலேயே அந்த விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹீலியம் கசிவுகள் மற்றும் த்ரெஷ்டர் செயலிழப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
பூமிக்கு திரும்புவது எப்போது?
இதுதொடர்பான அறிக்கையில், விரிவான பகுப்பாய்வு மற்றும் சோதனைக்கு அனுமதிக்கும் வகையில், NASA மற்றும் Boeing ஆகியவை ஸ்டார்லைனர் பயணிகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. முறையான மதிப்பாய்வுக்குப் பிறகு, பூமிக்கு திரும்பும் பயணத்திற்கான தேதி நிர்ணயிக்க விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய சூழலில், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்பும் பயணம், காலவரையரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சிக்கல்கள்:
ஸ்டார்லைனர் பணி ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும், தனது பணிகளில் நான்கு ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. அதன் அட்லஸ் 5 ராக்கெட் மற்றும் கவுண்ட்டவுன் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களால், ஏவப்படுவதற்கு முன்பே அது பல தாமதங்களை எதிர்கொண்டது. தற்போது விண்வெளியை அடைந்த பிறகு, கூடுதல் ஹீலியம் கசிவுகள் மற்றும் த்ரெஷ்டர் செயலிழப்பு போன்ற சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ISS க்கு வழக்கமாக பயணத்தை மேற்கொள்ள ஸ்டார்லைனர் நிறுவனத்திற்கு சான்றளிக்க நாசா இலக்கு வைத்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் விண்கலத்தில் பல்வேறு கோளாறுகள் எழுவது, சான்றளிப்பதில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.