Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், மறுபுறம் எல்லையில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நடந்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரு தரப்பும் ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இறுதிகட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடைபெற்றது. ஆனால், இருதரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு
கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில், 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் மாறி மாறி நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்
இதையடுத்து, இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர, பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. உலக நாடுகளின் தலையீட்டால், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. முழுமையான போர் நிறுத்தம் தொடர்பாக, துருக்கியில் இரு தரப்பு சார்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தெற்கு கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எனும் இடத்தில், இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. அதில், 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இருநாடுகளுக்கு மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதனால் பதிலடி கொடுக்க வேண்டியது இருந்தது என்றும் பாகிஸ்தான் கூறி இருக்கிறது.
இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் படைகள் ஸ்பின் போல்டாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
எனினும், பேச்சுவார்த்தைக் குழுவை மதித்தும், பொதுமக்கள் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், அமீரகத்தின் படைகள் இதுவரை எந்த பதிலடியும் கொடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இரு தரப்பும் மீண்டும் மோதலை தொடங்கியுள்ளதால், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.





















