US Tomahawk Missile: யம்மாடி! மாஸ்கோ வரை பாயும் டொமாஹாக் ஏவுகணை; உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா? அலெர்ட் மோடில் ரஷ்யா
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு உதவிவரும் அமெரிக்கா, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுகணை மாஸ்கோ வரை சென்று தாக்கும் திறன் கொண்டதால் ரஷ்யா அலெர்ட் ஆகியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகளை தாக்குவதற்காக, நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாஹாக் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்துவரும் நிலையில், இதனால் ஒன்றும் மாறப் போவதில்லை என ரஷ்யா தில்லாக பதிலளித்துள்ளது.
மாஸ்கோ வரை சென்று தாக்கம் திறக் கொண்ட டொமாஹாக் ஏவுகணை
அமெரிக்கா வைத்துள்ள டொமாஹாக்(Tomahawk) ஏவுகணைகள், 1,550 மைல், அதாவது, சமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கினால், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை கூட உக்ரைனால் தாக்க முடியும்.
டொமாஹாக் ஏவுகணைகளை வழங்குவாரா ட்ரம்ப்.?
உக்ரைனின் இந்த கோரிக்கையை வைத்துள்ள நிலையில், முன்னதாக, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதை ட்ரம்ப் நிராகரித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையே வேறு.
ட்ரம்ப் பதவியேற்றபின், உக்ரைனுக்கான நிதியுதவிகள் மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்தி வைத்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா நிறைய செலவழித்துவிட்டதாகவும், முந்தைய அதிபர் பைடனின் நிர்வாகம் இத்தகைய நிலையை ஏற்படுத்தியதாகவும் சாடினார்.
அதோடு, உக்ரைனுக்காக அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைத்தார். மேலும், ஏற்கனவே உக்ரைனுக்கு அளிக்கப்பட்ட நிதி மற்றும் ஆயுத உதவிக்கு கைமாறாக, உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை கேட்டார் ட்ரம்ப்.
ஆனால், பல மாதங்களாக அந்த ஒப்பந்தத்திற்கு மறுத்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. பின்னர், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து சமாளிக்க வேறு வழியின்றி ட்ரம்ப்பின் ஆசைக்கு அடிபணிந்தார்.
உக்ரைன் உடனான கனிம ஒப்பந்தம் கையெழுத்தான நிலைய்ல், அந்நாட்டிற்கு தற்போது முழு ஆதரவு அளித்து வருகிறார் ட்ரம்ப். இதனால், உக்ரைன் கோரியபடி, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வழங்க அவர் தயாராக இருப்பதாக தோன்றுவதாக, அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனின் கோரிக்கை பரிசீலிப்பில் உள்ளதாகவும், இறுதி முடிவை அதிபர் ட்ரம்ப் எடுப்பார் எனவும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ரியாக்ஷன் என்ன.?
அமெரிக்கா, உக்ரைனின் இந்த நகர்வுகளை ரஷ்யா உண்ணிப்பாக கவனித்து வருகிறது. இது குறித்து கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உக்ரைனுக்கு அமெரிக்காவின் டொமாஹாக் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ரஷ்யாவின் ராணுவ நிபுணர்கள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஏவுகணைகளுக்கான இலக்கு தரவை அமெரிக்கா வழங்கியதா அல்லது உக்ரைன் வழங்கியதா என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ட்ரோன்களை வைத்து ரஷ்யாவை கதிகலங்க வைத்து வருகிறது உக்ரைன். இந்த நிலையில், டொமாஹாக் ஏவுகணை கிடைத்தால் என்ன நடக்குமோ.?





















