Crude Oil-US Condition: “அந்த ஒரு இடத்த தவிர எங்க வேணாலும் எண்ணெய் வாங்கிக்கோங்க“ - இந்தியாவிற்கு அமெரிக்கா கன்டிஷன்
உலக அளவில், கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள நிலையல், இந்தியாவிற்கு அமெரிக்கா ஒரு கன்டிஷனை போட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

உலக அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில் முக்கியமான ஒரு நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதிலும், ரஷ்யாவிடமிருந்தே அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ஆனால் அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய, அமெரிக்காவின் அனுமதியை இந்தியா கோரிய நிலையில், ரஷ்யாவைத் தவிர எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
“ரஷ்யாவை தவிர எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்“
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேசியுள்ள அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட், உலகில் நிறைய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர், எனவே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் மலிவானது என்பதாலேயே இந்தியா அதை வாங்குகிறது என்றும் வேறு யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்பவில்லை என்றும், அதனால் தான் அவர்கள் தள்ளுபடி விலையில் விற்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மலிவான விலையில் எண்ணெயை வாங்குவதற்காக இந்தியா ஒரு சமரசத்தை செய்துள்ளதாகவும், அது, ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஒருவருக்கு இந்தியா பணம் கொடுப்பதாகும் எனவும் கிறிஸ் ரைட் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா தங்களுடன் இணைந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், உலகில் எந்த ஒரு நாட்டிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கலாம், ஆனால் ரஷ்ய எண்ணெயை வாங்கக் கூடாது என்றும் அது தான் தங்கள் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை“
அதோடு, இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை என கூறியுள்ள அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும், அதே சமயம், இந்தியா உடனான தங்கள் உறவுகளை வளர்க்க விரும்புவதாகம் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகள் என்றும், இந்தியாவை தாங்கள் நேசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் அதிக எரிசக்தி வர்த்தகத்தையும், அதிக தொடர்புகளையும் தாங்க விரும்புவதாக தெரிவித்த அவர், ஆனால் இந்தியா மற்றொரு பிரச்னையில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரஷ்யா, ஈரான், மற்றும் வெனிசுலாவிலிருந்து ஒரே நேரத்தில் எண்ணெய் விநியோகத்தை துண்டிப்பது, உலக அளவில் எண்ணெய் விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தியாவின் கவலையாக உள்ளது.
இந்தியா, உலகின் 3-வது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இருக்கும் நிலையில், அதன் எரிசக்தி பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல், அமெரிக்காவின் தடைகள் காரணமாக, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது இந்தியா. இந்நிலையில் தான், தற்போது அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய, அமெரிக்காவிடம் அனுமதி கேட்டுள்ளது.
ரஷ்யாவில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை
இதனிடையே, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு தடை விதித்து ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், தற்போது இந்தியா அங்கிருந்து எண்ணெய் வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















