முஸ்லீம் அல்லாதவர்களுக்கு புதிய சிவில் சட்டம்: அபுதாபி அரசு அளித்த அதிரடி ஆபர்!
அபுதாபியில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுஏஇ என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லீம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். துபாய், அபுதாபி போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி விதிகள் விதிக்கப்பட்டு அதை செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. இந்தோனேசியா உள்பட பல முஸ்லீம் நாடுகளில் ஷரியா என்று அழைக்கபடும் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த தலிபான்களும் ஷரியா சட்டத்திற்கு கீழ் செயல்படும் ஹட் மற்றும் தசிர் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த சட்டத்தின் கீழ் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஆண் துணையோடு வெளியே செல்லவேண்டும் என்றும், பர்தா கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அந்நாட்டு பெண்கள் செய்ய தவறினால் பொதுமக்கள் பார்வையில் கசையடி போன்ற கடமையான தண்டனைகள் வழங்கப்பட்டது.
மேலும், `ஹட்` குற்றங்களில் திருடும் குற்றத்திற்கு திருடியவரின் கையை வெட்டுவது,திருமணத்திற்கு வெளியே உறவு வைத்திருக்கும் குற்றத்தில் கல்லால் அடித்து கொலை, கற்பழிப்பு குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை போன்ற கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டன.இதேபோல் தான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முஸ்லீம் மக்களுக்கென பிரத்யேக சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்களை தொடர்ந்து இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த மக்களும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்த பொதுமக்கள் இஸ்லாமிய சட்டத்தின்படி குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை பின்பற்றி வருவதாகவும், இது தங்கள் வாழ்வியல் முறையில் இருந்து வேறுபடுவதாகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அபுதாபி அரசு, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு புதிய சிவில் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனமான 'வாம்' வெளியிட்ட அறிக்கையில், குழந்தை பராமரிப்பு, வாரிசுரிமை, விவாகரத்து மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் வகையில் அபுதாபியில் இந்த புதிய சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் குடிபெயர்ந்த மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக தனி நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட்டு இந்த வழக்குகளை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய சிவில் சட்டத்தின் கீழ் செயல்படும் நீதிமன்றத்தில் அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அபுதாபியில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கொண்டுவரப்பட்ட புதிய சிவில் சட்டமானது குடிபெயர்ந்த மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அபுதாபியை தொடர்ந்து துபாய் போன்ற முக்கிய நகரங்களில் இந்த புதிய சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.