வீட்டில் பார்த்த மாப்பிள்ளை.. பிடிக்காமல் டேட்டிங் சென்ற இளம்பெண்... ஊரடங்கால் இணைந்த ஜோடி...!
டேட்டிங் சென்ற போது கொரோனா தொற்று காரணமாக ஒன்றாக சிக்கிக் கொண்ட சீனத் தம்பதி ஒன்று சமீபத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

டேட்டிங் சென்ற போது கொரோனா தொற்று காரணமாக ஒன்றாக சிக்கிக் கொண்ட சீனத் தம்பதி ஒன்று சமீபத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
ழாவ் ஷியோகிங் என்ற 28 வயது சீனப் பெண் ஒருவர் வடக்கு சீனாவில் ஷான்ஷி மாகாணத்தில் இருந்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது, வேறு நகரத்தில் வாழும் இளைஞரை வரன் பார்ப்பதற்காகவும், அவரின் குடும்பம் குறித்து அறிந்துகொள்ளவும் ஒரு நாள் போதும் என்ற நினைப்புடன் அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
`நான் அவரை அப்போதுதான் இரண்டாவது முறையாகப் பார்த்தேன். எனவே அவரது வீட்டில் தங்குவதற்குக் கூச்சமாக இருந்தது’ எனக் கூறுகிறார் ழாவ் ஷியோகிங். வரன் பார்ப்பதற்காகவும், அவரின் குடும்பத்தைச் சந்திப்பதற்காகவும் ழாவ் சென்ற போது, சீன அரசு திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதை முன்வைத்து ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சுமார் ஒரு வாரம் அங்கு தங்கிய பிறகு, இளைஞரின் வீட்டில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வற்புறுத்திய போது, ழாவ் விரைந்து எதனையும் செய்ய வேண்டாம் எனத் தள்ளிப்போட்டதாகக் கூறுகிறார்.

ழாவ் ஃபெயி என்ற அந்த இளைஞரின் படத்தை முதலில் பார்த்த ழா ஷியோகிங்கிற்கு முதலில் அவரைப் பிடிக்கவில்லை என்ற போதும் நேரில் சந்தித்த போது தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
தங்கள் தொடக்க காலம் சற்றே சறுக்கல்களால் இருந்தாலும், காலப் போக்கில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு, சமீபத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆன்லைனில் ஆப்பிள் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொள்ளும் ழாவ் ஷியோகிங் தன்னுடைய காதலர் தனக்கு பக்க பலமாக இருப்பதாகக் கூறுகிறார். `அவரது வீட்டில் இருந்தபடியே, லைவ்ஸ்ட்ரீமில் ஆப்பிள்களை விற்க வேண்டிய நிலை என்னுடையது. ஆனால் நான் எவ்வளவு தாமதமானாலும், அவர் என்னோடு இருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று கூறுகிறார் ழாவ் ஷியோகிங்.

`எங்கள் இருவருக்கும் நன்றாக ஒத்துப் போகிறது; எங்கள் இருவரின் பெற்றோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று கூறுகிறார் ழாவ் ஷியோகிங். இந்த செய்தி சீன சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஊரடங்கு விதிகளால் சிக்கிக் கொண்ட காதல் ஜோடிகள் என்ற அடிப்படையில் சீனாவில் சமீபத்தில் வைரலான கதை இது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வாங் என்ற பெண் தன்னுடைய வரனின் வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்று ஊரடங்கு விதிகளால் சிக்கிக் கொண்டார். எனினும், ழாவ் ஷியோகிங்கைப் போல அல்லாமல், வாங் தனக்கு பிடிக்காத வரனுடன் ஒரு வாரம் முழுவதும் சிக்கித் தவித்த கதையே வைரலானது.





















