Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Israel Attacks Lebanon: இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது.
Israel Attacks Lebanon: இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
500-ஐ நெருங்கும் உயிரிழப்பு:
திங்களன்று இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் நடத்திய தாக்குதல்களில், தற்போது வரை பெண்கள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 35 குழந்தைகளும், 58 பெண்களும் அடங்குவர். 2006 இஸ்ரேல்- ஹெஸ்புல்லா போருக்குப் பிறகு நடந்துள்ள இந்த மிக மோசமான தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்புல்லாவிற்கு எதிரான வான்வழி தாக்குதலை விரிவுபடுத்துவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் வசிப்பவர்களை எச்சரித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்பட்ட 1,300 இலக்குகள்:
இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் 1,300 இலக்குகளை குறிவைத்து 650 முறை வரை தாக்கியுள்ளது,. இது ஹெஸ்புல்லா போராளிக் குழுவிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு நடவடிக்கையாக, இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு முழுமையான போரின் சூழலை எழுப்பியுள்ளது. அல் ஜசீராவின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பின்ட் ஜபீல், ஐடரூன், மஜ்தல் செலம், ஹுலா, டூரா, க்லைலே, ஹாரிஸ், நபி சிட், தாரையா, ஷ்மேஸ்டார், ஹர்பட்டா, லிபயா மற்றும் சோமோர் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, லெபனான் குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய இஸ்ரேலிய அழைப்புகளுக்கு செவிசாய்க்குமாறு வலியுறுத்தினார், "இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இப்போது தீங்கு விளைவிக்கும் வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம், ”என்று தெரிவித்துள்ளார்.
உச்சகட்ட பதற்றத்தில் லெபனான்
செவ்வாயன்று அதிகாலையிலும், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு லெபனானில் இருந்து வெளியேறி வருவதாக தகவல் வெள்யாகியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் மருத்துவமனைகள் அத்தியாவசியமற்ற செயல்பாடுகளை ரத்து செய்துள்ளன.
உலக நாடுகள் எச்சரிக்கை:
எகிப்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " லெபனான் விவகாரத்தில் சர்வதேச சக்திகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட" அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் முழு பிராந்தியத்தையும் குழப்பத்திற்கு இழுக்கக்கூடும்" என்றும் துருக்கி எச்சரித்துள்ளது. இதேபோன்று, தாக்குதல்களின் தீவிரத்தை குறைக்க அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. மேலும், “இந்த நிலை மிகவும் ஆபத்தானது மற்றும் கவலை அளிக்கிறது. நாம் கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போரில் இருக்கிறோம்” என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. லெபனான் விவகாரம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் இந்த வாரம் நடத்தப்பட வேண்டும் என்று ஃப்ரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.