ஸ்கூல் வேனில் லாக் செய்யப்பட்ட சிறுமி! 4 மணிநேர வெப்பத்தால் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
சிறுமியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என பலரும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்கூல் வேனிலேயே மறந்துபோய் லாக் செய்யப்பட்ட 4 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் கத்தாரில் நடந்துள்ளது
கேரளாவை பூர்வீகமாக கொண்ட தம்பதியான அபிலாஷ் மற்றும் சவுமியா கத்தாரில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். அதில் மின்சா என்ற 4 வயது மகளும் இருந்துள்ளார். அவர் கத்தாரின் வாக்ராவில் உள்ள ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 11ம் தேதி மின்சாவுக்கு பிறந்தநாள். ஆனாலும் பள்ளிக்குச் சென்றுள்ளார் மின்சா. காலையில் பள்ளி வேனில் ஏறி சென்ற மின்சா அசந்து தூங்கியுள்ளார். உள்ளே சிறுமி தூங்கியதைக் கவனிக்காத ஓட்டுநரும், க்ளீனரும் பள்ளி வேனை வெயிலில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழித்து மீண்டும் மாணவர்களை வேனில் ஏற்ற ஓட்டுநர் வந்துள்ளார். அப்போதுதான் பள்ளி வேனுக்குள் ஒரு சிறுமி மயக்கமடைந்து கிடந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சத்தமிட்டுள்ளார் ஓட்டுநர். உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். கடும் வெயிலில் வாகனம் நிறுத்தப்பட்டதால் ஹீட் தாங்காமலேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கத்தாரில் தற்போது 36டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டிவதைக்கிறது. சன்னல்கள் மூடப்பட்ட வாகனத்தில் இவ்வளவு ஹீட் என்பதால் சிறுமியால் தாங்க முடியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சிறுமியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என பலரும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். கத்தார் பள்ளிக்கல்வித்துறையும் சிறுமியின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை,
''தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி மாணவி உயிரிழந்ததற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் சார்பில் இரங்கல் தெரிவித்துகொள்கிறோம். மாணவியின் குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். அந்தந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்குகிறோம். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. பாதுகாப்பு விவகாரங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு குறைபாட்டையும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் பொறுத்துக்கொள்ளாது'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
The Ministry of Education and Higher Education mourns the death of a kindergarten student at a private school. The Ministry, in cooperation with the respective authorities have started an investigation into the incident.
— وزارة التربية والتعليم والتعليم العالي (@Qatar_Edu) September 11, 2022
முன்னதாக, ஜூலை 2021ல், இதேபோன்ற சம்பவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அஜ்மானில் நடந்தது. பேருந்துக்குள் பூட்டப்பட்ட 4 வயது சிறுவன் மூச்சுத்தினறல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக மயக்கமடைந்து உயிரிழந்தான்.