SpaceX Starlink Satellite: அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்.. 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!
ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ் 22 செயற்கைக்கோள்கள் இன்று அதிகாலை புளோரிடாவிலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
Liftoff of Falcon 9! pic.twitter.com/uXoIcobVKD
— SpaceX (@SpaceX) September 24, 2023
எலான் மஸ்க் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவைக்காக 2018 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை 4700 க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.
Falcon 9’s first stage has landed on the Just Read the Instructions droneship, the second booster in our fleet with 17 launches and landings pic.twitter.com/b6USZIjwx7
— SpaceX (@SpaceX) September 24, 2023
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை புளோரிடாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3:23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட பின் சுமார் 8.5 நிமிடங்களில் ஃபால்கன் 9 ராக்கெட் மீண்டும் பூமியை வந்தடைந்தது. அதாவது பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில், ராக்கெட்டின் முதல் நிலை மீண்டும் பொறுத்தப்பட்டது. 6 வது முறையாக ஸ்டார்லிங்க் திட்டம் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபால்கன் 9 ராக்கெட் சுமந்து சென்ற 22 செயற்கைக்கோள்களும் 62.5 நிமிடங்களில் பூமியின் புவி வட்டார பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தொகுதிகள் மூலம், இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் 4,700-க்கும் மேற்பட்ட ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று வானியல் இயற்பியலாளரும் செயற்கைக்கோள் கண்காணிப்பாளருமான ஜொனாதன் மெக்டோவல் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்காலத்தில் இன்னும் பல ஸ்டார்லிங்க் தொகுதிகள் அனுப்பப்படும் என்றும், சுமார் 12,000 இணைய செயற்கைக்கோள்களை LEO (low earth orbit) இல் நிலைநிறுத்துவதற்கு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 30,000 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சில நிபுணர்களின் கூற்றுப்படி, வளர்ந்து வரும் நெட்வொர்க் நீண்ட காலத்திற்கு விண்வெளி நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சமீபத்தில் ஆறு மாத கால இடைவெளியில் 25,000 மோதல் - தவிர்ப்பு (collision-avoidance maneuvers) சூழ்ச்சிகளைச் செய்துள்ளது. மேலும் அதிகப்படியான செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையை அடையும் போது அந்த எண்ணிக்கை உயரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.