இரண்டு வாரங்களாக கடுமையான பசி...உரிமையாளர் உடலை கடித்து தின்ற பூனைகள்...
Bataysk நகரத்தில் பெண் ஒருவர் சில வாரங்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என்றும், போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை எனவும் கூறி சக தோழி போலீசுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பெண் ஒருவரின் சடலத்தை பூனைகள் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அலாதி பிரியம் உண்டு. ஆனால் சில நேரங்களில் உரிமையாளர் என்று கூட பாராமல் அவைகள் நம்மை தாக்குவதுண்டு. எனவே எப்போதும் செல்லப் பிராணிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். ஆனால் ரஷ்யாவில் பசி காரணமாக செல்லப் பிராணிகள் செய்த செயல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டில் உள்ள Bataysk நகரத்தில் பெண் ஒருவர் சில வாரங்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என்றும், போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை எனவும் கூறி அவரது சக தோழி போலீசுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற போது அந்தப் பெண்ணின் குடியிருப்பில் இருந்து அழுகிய நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பெண் 20க்கும் மேற்பட்ட Maine Coon வகையைச் சேர்ந்த பூனைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த வகை பூனைகள் அமெரிக்காவின் மைனே மாநிலத்தில் தோன்றிய மிகவும் பிரபலமான பெரிய உள்நாட்டு இனமாகும். வீட்டினுள் செல்லும் போது அப்பெண் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் வளர்த்து வந்த பூனைகள் அவரின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பூனைகள் பசி தாங்க முடியாமல் இறந்த உடலை கடித்து சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சில ஆரோக்கியமான பூனைகள் அருகிலுள்ள மற்ற வீடுகளில் விற்கப்பட்டும், விலங்குகள் நல வாரியத்திடமும் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் ஒரு பெண் தனது செல்லப் பூனைகளால் பாதி உண்ணப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார். இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது அவரது தலை,கழுத்து, கையின் ஒரு பகுதியை அவர் வளர்த்து வந்த 10 பூனைகளால் சிதைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்