கொரோனா பாதிப்புக்கு பின் மூன்றில் ஒருவருக்கு மனநல கோளாறு -ஆய்வில் தகவல்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு 3ல் ஒருவருக்கு நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.53 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 5 நாட்களாக கொரோனா பரவல் 10ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கொரோனா பாதிப்புக்கு பிறகு 3ல் ஒருவருக்கு நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பால் ஹாரிசன் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவுகள் பிரபல மருத்துவ ஜெர்னல் ‘லென்சட் சைகாட்ரி’ என்பதில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் கிட்டதட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 34 சதவிகிதம் பேருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்த 6ஆவது மாதத்திற்குள் நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 13 சதவிகிதம் பெருக்கு இந்த கோளாறு முதல் முறையாக ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கவலை(17%), தூக்கம் இன்மை(5%) உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவு வரை சென்ற நோயாளிகளுக்கு தான் அதிகளவில் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் அதிக பெருக்கு பக்கவாதம்(7%) நோய் ஏற்பட்டுள்ளது. மேலும் 2% பேருக்கு நியாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.