(Source: ECI/ABP News/ABP Majha)
தேர்தல் ஆணையம் முடிவை எதிர்த்து மமதா பேனர்ஜி இன்று தர்ணா போராட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, மேற்கு வங்க முதலவர் மமதா பேனர்ஜி இன்று மதியம் 12 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார் .
24 மணி நேர தேர்தல் பரப்புரைக்குத் தடை என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, மேற்கு வங்க முதலவர் மமதா பேனர்ஜி இன்று மதியம் 12 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார் .
மேற்குவங்கத்தில் ஐந்தாவது கட்ட சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. 45 தொகுதிகளில் ஐந்தாவது கட்டமாக இம்மாதம் 17-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளன.
முன்னதாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான செல்வி மம்தா பானர்ஜி,"வாக்குகளைப் பிரிப்பவர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மமதா பேனர்ஜி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
புகார் குறித்து தேர்தல் ஆணையத்திடம் மம்தா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும், அதனால் அவருக்கு 24 மணிநேரம் பரப்புரை செய்ய தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் மமதா பேனர்ஜி நேற்று தனது ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டினார்.
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon.
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2021
36 தொகுதிகளில் நடைபெறவுள்ள ஏழாம் கட்ட தேர்தலுக்கும், 35 தொகுதிகளில் நடைபெறவுள்ள எட்டாம் கட்ட தேர்தலுக்கும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது