கிரிக்கெட் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்... மயங்கி விழுந்து உயிர் போன பரிதாபம்
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
விழுப்புரம்: திண்டிவனம் அருகே நொளம்பூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீரென மயங்கி கிழே விழுந்த இளைஞர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமத்தை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் உத்திரமேரூர் அருகேயுள்ள குன்ன கொளத்தூரை சேர்ந்த சேகர் மகன் பாலாஜி (32) என்பவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் பாலாஜி நொளம்பூர் வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட கொளப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நொளம்பூர் அணிக்கும் கீழ்சேவூர் அணிக்கும் நட்பு ரீதியாக கிரிக்கெட் விளையாடும் போது நொளம்பூர் அணி சார்பில் பந்து வீச சென்ற பாலாஜி திடீரென மயங்கி கிழே விழுந்துள்ளார்.
போலீஸ் விசாரணை
அப்போது உடன் விளையாடியவர்கள் அவரை மீட்டு பிரம்மதேசம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.