காசுதான் முக்கியம்... காசு குடுத்தாதான் இங்க வேலை நடக்கும்... சிக்கிய நகராட்சி வருவாய் உதவியாளர்
காலிமனைக்கு வரிவிதிப்பு எண் உருவாக்கித்தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது.
விழுப்புரம்: காலிமனைக்கு வரிவிதிப்பு எண் உருவாக்கித்தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர்
திருவள்ளூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 42). சென்னையில் மேன்ஷன் நடத்தி வரும் இவர், கடந்த 8.8.2024 அன்று விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் 1,587 சதுரடி பரப்பில் காலிமனை வாங்கினார். இதற்கு வரி விதிப்பு எண் உருவாக்கித் தருவதற்காக விழுப்புரம் நகராட்சி, பில் கலெக்டரான வருவாய் உதவியாளர் மதனகுரு மனைவி குணா (49) என்பவரை அணுகினார். அதற்கு வரிவிதிப்பு எண் உருவாக்கித்தர வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண்டுமென கூறியுள்ளார்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று இளங்கோவன் கூறியபோதிலும் பணம் கொடுத்தால் உடனே வரி விதிப்பு எண் உருவாக்கித்தர ஏற்பாடு செய்வதாகவும், பணத்தை மகாராஜபுரம் பகுதியில் வைத்து தரும்படியும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி காலை ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை இளங்கோவன் எடுத்துக்கொண்டு, மகாராஜபுரம் சென்று அங்கிருந்த குணாவிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று குணாவை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவரை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றினர். அதன் பிறகு குணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கையூட்டு பெறுவது சட்டத்திற்கு எதிரானது
”கையூட்டு பெறுவது சட்டத்திற்கு எதிரானது. கையூட்டு தொடர்பான புகார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்படலாம்.”
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. (1) ஊழல் எதிர்ப்பிற்கான உதவி அழைப்பு எண் 1064 மற்றும் (2) விழிப்புப் பணி அழைப்பு எண் - 1965, இதன் வாயிலாகப் புகார்தாரர்கள் புகார் செய்யலாம். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் எண்.293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர் , சென்னை- 600016 என்ற முகவரியில் உள்ள அரசு கட்டடத்தில் மே’2016 முதல் செயல்பட்டு வருகிறது.