விழுப்புரத்தில் பரபரப்பு... மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்
மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டம் ராம்பாக்கம் பொதுமக்கள் முடிவு.
விழுப்புரம்: மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்த ராம்பாக்கம் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு ஏன் வழங்கப்படாமல் உள்ளது?
நாங்கள் ராம்பாக்கம் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பானது கடந்த 1964-ல் அப்போதைய அரசால் வழங்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரையிலும் அரசு எங்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு வழங்கி வருகிறபோதிலும் தற்போது மனைப்பட்டா அரசு தரப்பில் தயார் நிலையில் இருந்தும் எங்களுக்கு ஏன் வழங்கப்படாமல் உள்ளது என தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டம்
எனவே எங்களுக்கு மனைப்பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட ஆட்சியர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.