விழுப்புரம்: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு ; டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டம்
விழுப்புரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டம்.
விழுப்புரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100 அடி உயர டவர் மீது ஏறி இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் அடுத்த காணை அருகே உள்ளது காங்கேயனூர் கிராமம். இந்த கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணியை கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கிராமத்தின் மைய பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், கதிர்வீச்சு உள்ளிட்ட பிரச்னைகள் எழும் என்பதால், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர். மேலும், காங்கேயனூர் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போதும், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, செல்போன் கோபுரத்தை தனியார் நிறுவனம் அமைத்தது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள நேற்று, பணியாளர்கள் அங்கு வந்தனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுமார் 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது செல்போன் கோபுரம் செயல்பட அனுமதிக்க கூடாது, உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், காணை காவல் ஆய்வாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாலுகா அலுவலகத்தில் இன்று சமாதானம் கூட்டம் நடத்தி தீர்வு காணலாம். எனவே போராட்டத்தை கைவிட்டு, செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி, கீழே இறங்கி வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்