வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! உபரி நீர் வெளியேற்றம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வீடூர் அணை கடல் போல் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

விழுப்புரம்: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருவதால் மூன்றாவது நாளாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீடூர் அணையில் உபரி நீர் வெளியற்றம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் ( 605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3,196 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 4,410 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். காலை 8 மணிக்கு வினாடிக்கு, 5,647 கன அடி தண்ணீர் வந்தது. அதே அளவு 5,647 கன அடி தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றினர்.
மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 4333 கன அடி தண்ணீர் வந்ததையடுத்து, அணையிலிருந்து 5581 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். மாலை 4 மணிக்கு வினாடிக்கு, 2166 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து, 4248 கன அடி தண்ணீரை அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றினர்.
இன்று வீடூர் அணைக்கு காலை நிலவரபடி நீர்வரத்து வினாடிக்கு 3021 கனஅடி நீர் வந்தது 4 மணி நிலவரப்படி 3450 கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. மேலும் அணைக்கு வருகின்ற நீர் முழுவதுமாக வெளியேற்றபட்டு வருகிறது. தற்போது வீடூர் அணை கடல் போல் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் , மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அணையை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் தண்ணீர் வெளியேறுவதை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அணையில் பொதுமக்கள் இறங்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழை எச்சரிக்கை:
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 23-10-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
24-10-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-10-2025 முதல் 27-10-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.





















