(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரத்தில் பரபரப்பு... நீர்நிலையில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றிய அதிகாரிகள்
மருதூர் ஏரியின் வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றிய அதிகாரிகள். போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்.
விழுப்புரம்: விழுப்புரம் நகரபகுதியான மருதூர் ஏரியின் வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றியபோது, அப்பகுதிமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து, போலீசார் பொதுமக்கள் ஒருவரை தாக்கி வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து வீடுகள் கோவில்கள், கட்டிடங்கள் கட்டப்படிருந்தால் அதனை அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் நகர பகுதியான ராஜீவ் காந்தி நகர், மணி நகர், சின்னப்ப நகர் ஆகிய பகுதிகளில் 391 குடும்பத்தினர் மருதூர் ஏரிக்கு செல்லக்கூடிய வாய்கால் கரை பகுதி மற்றும் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற உத்தரவிடப்பட்டத்தின் பேரில் கடந்த ஆண்டு வீடுகளிலிருந்து வெளியேறி மாற்று இடங்களுக்கு செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்பிறகு கால அவகாசம் கொடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கேட்டதால் ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு நீட்டிக்கபட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி வீடுகளை இடிக்கும் போது அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்க கூடாதென விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு இன்று வீடுகள் இடிக்கும் நடவடிக்கையை பலத்த போலீசார் பாதுகாப்புடன் பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியினர் வீடுகளை இடிக்க வேண்டாம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணீர் மல்க தெரிவித்தனர். இருப்பினும் அப்பகுதியினர் கலைந்து செல்லாததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு அப்பகுதியினரை தாக்கி வாகனத்தில் அழைத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்து.