ஐயா குளத்த காணோம்...! கண்டுபிடிச்சு கொடுங்க... கோரிக்கை வைக்கும் மக்கள்
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குளம் இருந்த இடம் தெரியாமல் போனாதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குளம் இருந்த இடம் தெரியாமல் போனாதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டிவனத்தின் வரலாறு முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. திண்டிவனம், விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், 33 நகர மன்ற உறுப்பினர் கொண்ட தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். திண்டிவனம் ஒரு தேர்வு தர முனிசிபல் நகரம். திண்டிவனம் 1949 இல் பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர், 1970 இல் 2 ஆம் தர நகராட்சியாகவும், 1998 இல் 1 ஆம் தர நகராட்சியாகவும், 2008 இல் தேர்வு தரமாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
திண்டிவனம் என்ற பெயர் திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவியது. இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு 'புளியங்குடில்' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இவ்வாறு பழைமை வாய்ந்த திண்டிவனம் பகுதியில் கடந்த காலங்களில் ராஜாங்குளம், தீர்த்தக்குளம், நாகலாபுரம் குளம், மாரி செட்டிக்குளம், துலுக்கன்குளம், அகழிக்குளம், வீராங்குளம், தட்டான்குளம், தோப்புக்குளம், வாணியன்குளம் உள்ளிட்ட 15 குளங்கள் இருந்தன. அதேபோல் பூதான்குட்டை, வண்ணான்குட்டை, செம்படன்குட்டை, சானப்பன் குட்டை என 9 குட்டைகள் இருந்தது.
இதனையடுத்து காவேரிப்பாக்கம் ஏரி, தாங்கல் ஏரி, ரோஷணை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, கிடங்கல் ஏரி என 7 ஏரிகள் உள்ளன. இந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் அனைத்தும் மழை, வெள்ள காலங்களில், நகரத்திற்குள் தண்ணீர் புகாமல், தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கியது.
தற்போது, நகராட்சியில் உள்ள 10க்கு மேற்பட்ட குளங்கள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக உள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி அதுவும் நாளடையில் இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. நீர்நிலை புறம்போக்கு, குளம், குட்டை, ஏரி என எதிலும் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் நகராட்சி வரி கட்டுவது, மின் இணைப்பு பெறுவது, பட்டா என அனைத்தையும் முறையாக வாங்கி குடியிருந்து வருகின்றனர். சமீபத்தில் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தை சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இருப்பதால், நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. கோவில் நிர்வாகமும் மேல் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. நகர பகுதியிலுள்ள குளம், குட்டைகள், ஏரிகள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி இருப்பதால் மழை காலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி அதிகாரி கூறுகையில்., தமிழக அரசு சார்பில் கடந்த 2011ம் ஆண்டில் 6வது நீர்பாசன கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது 7வது நீர்பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பிற்கு பிறகு, திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆக்கிமிப்புகள் கணக்கிடப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்.
அதன் பிறகுதான் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் என்றனர். திண்டிவனம் நகராட்சியில் எஞ்சியுள்ள குளம், குட்டை, ஏரி பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






















