ட்ரோனை பார்த்ததும் தெறித்து ஓடிய மது பிரியர்கள்; விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் : காட்டு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு... தெறித்து ஓடிய மதுகுடிப்போர்
விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலைய உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சம்பவங்களை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்ததில் மது அருந்தியவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள, ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி, கோட்டகுப்பம், மற்றும் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதிகளில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது.
திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மற்றும் கோட்டகுப்பம் பகுதியில் கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் ஆகியோர் மேற்பார்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தியவர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், ட்ரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடி முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடாதெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
மேலும், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் திண்டிவனம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கேமராவை கண்டு ஓட முயன்ற ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஆட்சிபாக்கம் பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்ததும் போலீசார் ட்ரோன் கேமராவுடன் வந்ததை கண்டு கூடியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஆட்சி பக்கம் பகுதியை சேர்ந்த ஜெய் கிருஷ்ணன் என்பதும் இந்த பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.