Villupuram: மேல்பாதி கோயில் விவகாரம்: இருதரப்பினர் இடையே கோட்டாட்சியர் 2ம் கட்ட விசாரணை
Villupuram: மேல்பாதி கோயில் விவகாரம்: இருதரப்பினர் இடையே கோட்டாட்சியர் தலைமையில் இரண்டாம் கட்ட விசாரணை...
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் :
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட விசாரணையில், கோயில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், தங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை:
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக, இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி, 145 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி, வருவாய்த் துறையினர் கடந்த மாதம் 7ஆம் தேதி சீல் வைத்தனர். கோயில் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என, இருசமூக மக்களும் பரஸ்பரம் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், கடந்த மாதம் 9ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம்:
இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 2ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சம்மன் அனுப்பப்பட்ட, ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் தரப்பைச் சேர்ந்த 5 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, அவர்கள் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. எனவே, அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில், எங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சந்திரபாலன் கூறியதாவது:-
திரௌபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக கோட்டாட்சியர் சம்மன் அனுப்பி இருந்தார். இதையடுத்து நாங்கள் விசாரணைக்கு நேரில் ஆஜரானோம். மேல்பாதி கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். இரு சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசு எடுக்கும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.