விழுப்புரத்தில் தேர்வில் பிட் அடித்ததாக கண்டிக்கப்பட்ட மாணவி தற்கொலை - 5 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
விழுப்புரம் தனியார் பள்ளி மாணவி அரையாண்டு தேர்வில் பிட் அடித்ததை பெற்றோர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 5 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு.
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் பள்ளி மாணவி அரையாண்டு தேர்வில் பிட் அடித்ததை பெற்றோர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 5 ஆசிரியர்கள் மீது கானை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதியான நாராயணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒருகோடி கிராமத்தை சார்ந்த ஒரு தம்பதியின் மகள் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் 13.12.23 ஆம் தேதி நடைபெற்ற அரையாண்டு தமிழ் பாட தேர்வில் மாணவி பிட் அடித்து தேர்வு எழுதியபோது ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது பெற்றோர், ஆசிரியரின் முன்னிலையில் மாணவியை அடித்து கண்டித்துவிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு இன்றைய தினம் மாணவி பள்ளி செல்லாமல் மன வேதனையில் அவமானம் தாங்க முடியாமல் வீட்டிலையே இருந்துள்ளார். இந்நிலையில் நண்பகலில் வீட்டிலிருந்த மாணவி மனவேதனையில் இருந்ததால் தனது வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர், மாணவியை விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி பள்ளிக்கு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரனை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்து இன்று உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென அப்பொழுது தான் உடலை பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தனர். மாணவியின் தந்தை நேதாஜி கானை காவல் நிலையத்தில் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படியில் காணை போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஜாதா உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.