கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை... விழுப்புரம் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம் அருகே கடனை திருப்பி கேட்ட மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொன்ற வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி மனைவி செல்லப்பாக்கியம் (எ) செல்லப்பாங்கி (வயது 65). இவரிடம், அதே கிராமத்தைச் சோ்ந்த மதுரைவீரன் மகனான கூலித் தொழிலாளி ராஜேஷ் (வயது 21) கடந்த 2022 ஆண்டு ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதை செல்லப்பாக்கியம் திருப்பி கேட்டபோது ராஜேஷ் தரவில்லை. இந்த நிலையில், 2022, பிப்ரவரி 13-ஆம் தேதி மூதாட்டி செல்லப்பாக்கியம் தனது மகன் பழனிவேலின் இரும்புக் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், மேலும் ரூ.500 - ஐ கடனாகத் தருமாறும், மொத்தமாக ரூ.2,500ஐ திருப்பித் தந்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறி, ராஜேஷை மூதாட்டி செல்லப் பாக்கியம் தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த நிலையில் அன்று தனது மகள் பவுனாம்பாள் வீட்டுக்கு செல்லப்பாக்கியம் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த ராஜேஷிடம் பணத்தை எப்போது தருவாய் எனக் கேட்டபோது வீட்டில் பணம் வைத்திருப்பதாகக் கூறி, செல்லப்பாக்கியத்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவா், வாயில் துணியை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான். தொடா்ந்து மூதாட்டியின் உடலை அருகிலிருந்த வீட்டின் கழிவுநீா்த் தொட்டியின் மூடியை அகற்றி அதில் போட்டுச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து வளவனூா் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரிய வந்த நிலையில், ராஜேஷை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீா்ப்பு வழங்கப்பட்டது. கொலைக் குற்றம் நிரூபணமானதால் தொழிலாளி ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தார். இதைத் தொடா்ந்து குற்றவாளியை கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.