மக்கள் குறைகள் தீர்க்கப்படுகிறதா? களத்தில் இறங்கிய ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்! பரபரக்கும் விழுப்புரம்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில், "உங்களுடன் எஸ்டாலின்" திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், "உங்களுடன் எஸ்டாலின்" திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (13.08.2025) ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு தேவையான அரசு சேவைகள் மற்றும் திட்டங்களை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் விதமாக "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் 15.07.2025 அன்று தொடங்கி 14.08.2025 வரை நடைபெறவுள்ளது. இதில் நகர்ப்புற பகுதிகளில் 21 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 81 முகாம்களும் ஆக மொத்தம் 102 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம், திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, தற்பொழுது வரை நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை விவரம், மனுக்கள் மீது தீர்வு கானாப்பட்ட எண்ணிக்கை விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை விவரம் குறித்தும், மனுக்கள் நிலுவைக்கான காரணம் குறித்து கேட்டறிந்ததுடன், மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், விண்ணப்பித்த நபர்களின் வீட்டிற்கே சென்று உண்மைத்தன்மை கண்டறியப்பட்டது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கி வருவதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முகாமில் தற்பொழுது வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை மற்றும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்கள் முதல்வரின் முகவரித்துறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல், முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிக்கு ரூ.8500/- மதிப்பீட்டில் மானிய விலையில் விசை தெளிப்பான் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
வட்டாட்சியர் ஆய்வின்போது, திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் யுவராஜ், செஞ்சி வருவாய் வட்டாட்சியர் துரைச்செல்வன், மேல்மலையனூர் வருவாய் தனலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.





















