2 ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிவறை... பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நகரமன்ற உறுப்பினர்...
விழுப்புரம் : இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிவறை... பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நகரமன்ற உறுப்பினர்...
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியால் கட்டப்பட்ட புதிய கழிவறை இரண்டு ஆண்டுகளாக திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை கூறி விழுப்புரம் 22-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கழிவறை திறக்கப்படுமா, மூடப்படுமா என்று பதாகை ஏந்தி நகரமன்ற கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவி தமிழ்செல்வி தலைமையிலான நகரமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக,மனித நேய மக்கள் கட்சி பாஜகவை சார்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டபோது அவசர கூட்டமாக நகரமன்ற நடைபெறும் போது ஏன் தீர்மான பிரதிகள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வழங்கவில்லை எனவும், நகரமன்ற கூட்டங்கள் மாதம் தோறும் நடத்தப்படாமல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏன் நடத்தப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.
அதனை கூட்டத்தில் பேசிய நகரமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள் நடைபெறவில்லை, தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை என அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்களும் நடவடிக்கை எடுக்காததால் எதற்காக உங்களுக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் நகரமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் 22 வது வார்டு உறுப்பினராக உள்ள ரியாஸ் அகமது தங்கள் பகுதியில் கட்டப்பட்ட நகராட்சி கழிவறை கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூடியே கிடப்பதாகவும் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கழிவறை திறக்கப்படுமா, மூடப்படுமா வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக நகரமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்