(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம்: இருளர் பகுதியில் தீப்பிடித்து வீடுகள் சேதம்- இலவச வீடு வழங்க ஆட்சியர் உத்தரவு
விழுப்புரம் அருகே இருளர் பகுதியில் 8 வீடுகளில் வசித்துவந்த 14 குடும்பங்களைச் சார்ந்த பழங்குடியினரின் குடிசை வீடுகள் மின்கசிவால் தீப்பிடித்து சேதம்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த சுப்புராயன் (வயது 59), செங்கேணி மனைவி செல்வி (38), கண்ணப்பன் (60), சந்திரன் (28), ஜெயக்குமார் (30), பிரகாஷ் (37), சிவராஜ் மனைவி சுமதி (60), முருகவேல் மனைவி ராதா (38) உள்ளிட்ட 14 குடும்பத்தினர் அங்கு சாலையோரமாக உள்ள இடத்தில் 8 குடிசை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சுப்புராயனின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ அருகில் இருந்த மற்ற 7 குடிசைகளுக்கும் பரவியது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 8 குடிசை வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு:-
8 வீடுகள் தீப்பிடித்து முழுவதுமாக சேதமடைந்ததையொட்டி மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி வேட்டி மற்றும் சேலை போன்ற நிவாரண உதவிகள் வழங்கியதுடன் தீயினால் சாதிச்சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை சேதமடைந்ததால் இவை அனைத்தும் இரண்டு தினங்களுக்குள் வருவாய்த்துறையின் மூலம் வழங்கிட உத்தரவிட்டதுடன், சேதமடைந்த 8 வீடுகளில் தங்கியிருந்த 14 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்காக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உத்தரவிட்டு அதற்குரிய இடங்கள் ஒருவார காலத்திற்குள் உரிய குடும்பங்களுக்கு சென்றடைய வருவாய்த்துறையினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்து ஒருவார காலத்திற்கு உணவு வழங்கிட வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு :-
இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், இளங்காடு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அப்போது கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செயலாளர் ஜீவா மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்