TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
இடி மின்னலுடன் பெய்த மழையில் வயல் வெளியில் பணி செய்து கொண்டிருந்த விவசாயி மழைக்காக வேப்ப மரத்தடியில் ஒதுங்கியபோது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழப்பு
விழுப்புரம் மரக்காணத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த மழையில் வயல் வெளியில் பணி செய்து கொண்டிருந்த விவசாயி மழைக்காக வேப்ப மரத்தடியில் ஒதுங்கியபோது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளான வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதிருந்தது. இதன் காரணமாக விழுப்புரம் நகர மற்றும் கிராம புற பகுதிகளான கோலியனூர், வளவனூர், சிறுவந்தாடு, மரக்காணம் உள்ளிட பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜேந்திரன் (39) இவரும் இவரது மனைவி ருக்குமணி (30) மகன் புவியரசன் (10) ஆகியோர் வைடப்பாக்கத்தில் உள்ள தங்களது 4 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள பகுதியில் களை எடுக்கும் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது தீடீரென இடி மின்னலுடன் பெய்த மழையால் அவர்களது நிலத்தில் உள்ள வேப்பமரம் அருகாமையில் மூன்று பேரும் நின்று இருந்துள்ளனர்.
அப்பொழுது திடீரென இடியுடன் கூடிய மின்னல் மரத்தின் மேல் விழுந்ததில் கீழே நின்று வந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளார் இந்நிலையில் அவரது அருகாமையில் இருந்த மனைவி ருக்குமணி மற்றும் மகன் புவியரசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் அவர்களை முருக்கேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சம்பவம் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மகன் கண் முன்னே மின்னல் தாக்கி ராஜேந்திரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வானிலை:
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
26-09-2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
27-09-2014 மற்றும் 28.09.2074: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29:98.2024 முதல் 30.09.2024 வரை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த தினங்களுக்கு (24.09.2024 மற்றும் 25.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.