திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை... எப்ப சார் முடிப்பீங்க ? - கதறும் வாகன ஓட்டிகள்
முருக்கேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் பார்ப்பதாகவும், வணிக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலையை குறுக்கலாக அமைத்து வருகின்றனர்.
விழுப்புரம்: திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலை மிகவும் பழமை வாய்ந்த கிருஷ்ணகிரி சாலை ஆகும். இந்த சாலை வழியாக கடந்த 20 ஆண்டுகளாக வாகன போக்குவரத்து, அதிகரித்ததால், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
மேலும் திருச்சி - சென்னை மற்றும் புதுச்சேரி - பெங்களூரு, புதுச்சேரி இ.சி.ஆர்., வழியாக சென்னை போன்ற சாலைகளில் ஏதேனும் திடீரென விபத்துகள் ஏற்பட்டால், அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது போன்ற நேரங்களில் அதிகாரிகள் இந்த சாலை வழியாக போக்குவரத்தை மாற்றி விடுவார்கள். அந்த நேரத்தில் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கும். அதனால் இந்த இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற அரசு முடிவு செய்து, கடந்த 2021-22ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 238 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்தது.
மேலும் 32 கி.மீ., துார சாலையை இரண்டு பிரிவாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன்படி, இந்த சாலைப் பணியை 2 ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் இருந்த 67 சிறிய, பெரிய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரம் உள்ள நீர்பிடிப்பு கிராமங்களில் 10 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. மரக்காணம் - திண்டிவனம் இணைப்பு சாலை பகுதி, எண்டியூர், நல்லாளம், பிரம்மதேசம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம் மின்துறை அலுவலகம் எதிரே செல்லும் மரக்காணம் - புதுச்சேரி - திண்டிவனம் சாலை சந்திப்பு, பகுதியில் ஆக்கிரமிப்பால், விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அந்த பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. மேலும் முருக்கேரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் பார்பதகவும், வணிக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலையை குருக்காகலாக அமைத்து வருகின்றனர். பல இடங்களில் துண்டு துண்டாக சாலை அமைத்து வருவதால் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. தற்போது சாலை விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பணி முடிந்ததும் ஆக்கிரமிப்பு
மன்னார்சாமி கோவில், எண்டியூர், நல்லாளம், முருக்கேரி, சிறுவாடி, கந்தாடு பகுதி, கடை தெருவின் இரு புறத்திலும், மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்தனர். பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் சரியான முறையில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் முடித்துள்ளனர். தற்போது, இந்த பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பணிகள் முடிவதற்குள் புதியதாக போடப்பட்ட மழை நீர் வடிகால் வாய்க்கால் மீது பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.