சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்: 20000 இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் (திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்:311) ஐ நிறைவேற்றக் கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக தொடக்க கல்வித்துறையில் 01.06.2009_க்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய். 8370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 5200 என்றும் நிர்ணயிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே பணி ஒரே கல்வி தகுதி ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வருவதால் ஒருநாள் இடைவெளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய வித்தியாசம் ரூபாய் 20000 என்ற அளவில் இருந்து வருகிறது இந்த ஊதிய முரணை சரி செய்யக்கோரி கடந்த 14 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி வரிசை எண்: 311 இல் இடம் பெற்றுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் பொழுது தமிழக அரசானது இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய மூன்று நபர் குழு ஒன்றை அமைத்தது. அதன் மூலம் மூன்று மாதத்திற்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
தற்போது இந்த சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற கோரி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் 26.02.2024 முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இன்று விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்பதாவது நாளாக பள்ளியைப் புறக்கணித்து போராடும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எங்கள் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை முடியும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என தெரிவித்துள்ளனர்.