குட் நியூஸ் மீனவர்களே ! பக்கா ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்... ரூ.1,000 கோடியில் கடல் அரிப்பினை தடுக்கும் திட்டம்
புதுச்சேரியில் ரூ.1,000 கோடியில் கடல் அரிப்பினை தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது - அமைச்சர் லட்சுமிநாராயணன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.1,000 கோடியில் கடல் அரிப்பினை தடுக்கும் திட்டம் (Sea erosion prevention project) செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். தொடர்ந்து, சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து சராமரியாக எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா:
மீன்வளத்தை பெருக்க கடலோர கிராமங்களில் செயற்கை பாறை திட்டுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது.
அமைச்சர் லட்சுமிநாராயணன்:
செயற்கை பாறை திட்டுகள் அமைக்க ரூ.4.34 கோடியில் மத்திய அரசின் நிர்வாக, செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. செயற்கை பாறை திட்டுகள் அமைக்க பொருத்தமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 இடங்களிலும், காரைக்காலில் 4 இடங்களிலும் செயற்கை பாறை திட்டுகள் வார்க்கும் பணி இந்த மாதத்தில் துவங்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா:
புதுச்சேரியில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடல் அரிப்பினை தடுக்க எந்தெந்த கடலோர கிராமங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லட்சுமிநாராயணன்:
புதுச்சேரி கடலோர மீனவ கிராமங்களில் துாண்டில் முள் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருசுகுப்பம், வைத்திகுப்பம், சோலை நகர் கிராமங்களில் துாண்டில் முள் வளைவு முறையில் பாறைகள் கொட்டி அரண் அமைக்கப்பட உள்ளது. செலவு மதிப்பீட்டை தயாரிக்க பொதுப்பணித் துறைக்கும், மத்திய அரசின் மீன்வளத் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு மீன்வளத் துறையிடமிருந்து இத்திட்டத்திற்கு நிதி உதவிக்கான ஒப்புதல் இதுநாள் வரை கிடைக்கவில்லை. எனவே நபார்டு வங்கி மூலம் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா:
நபார்டு வங்கி மூலம் எந்த திட்டத்தையும் எளிதில் செயல்படுத்த முடியாது. வில்லியனுார் தொகுதியில் நபார்டு வங்கி மூலம் செயல்படுத்த முயற்சி எடுத்த திட்டங்கள் 20 ஆண்டாக கிடப்பில் கிடந்தது. கடலோர பகுதிகளை ஆய்வு செய்து மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் :
பொதுப்பணித் துறை அமைச்சர் தன்னுடைய கடலோர கிராமங்களில் மட்டும் பாறைகள் கொட்டி கடல் அரிப்பு தடுக்கப்படும் என சொல்லுகிறார். காலாப்பட்டில் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலதாமதம் ஆனால் பல பிரச்னைகள் உருவாகும்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி: இந்த திட்டத்தில் என்னுடைய தொகுதியின் வம்பாகீரப்பாளையத்தையும் சேர்க்க வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.1000 கோடியில் திட்டமிட்டுள்ளோம். அதில் காலாப்பட்டு உட்பட அனைத்து மீனவ கிராமங்களையும் சேர்த்து தான் கடல் அரிப்பு திட்டம் உருவாக்கப்படுகின்றது. உலக வங்கி நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் 2 துறைகள் அனுமதி வழங்கிவிட்டன. இன்னும் சில துறைகளின் அனுமதி கிடைக்க வேண்டும். இதன்பின் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நாகதியாகராஜன் (தி.மு.க): காரைக்கால் மீனவ கிராமங்களிலும் கடல் அரிப்பு ஏற்படுகின்றது. அங்கேயும் இத்திட்டத்தை அரசு ஆரம்பிக்க வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: காரைக்கால் மீனவ கிராமங்களுக்கு திட்டத்தை ஆரம்பிக்க, விரிவான திட்ட அறிக்கை தேவை. என்.சி.சி.ஆர் திட்டத்தின் கீழ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திடம் இது குறித்து கலந்து ஆலோசித்து செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

