புதுச்சேரியில் பிளாஸ்டிக் குப்பைக்கு முற்றுப்புள்ளி: அரசின் அதிரடி திட்டம்
புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் பூஜ்ஜிய இலக்கு: பைரோலிசிஸ் ஆலையைத் தொடங்க அரசு தயாராகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நகரப்பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, பைரோலிசிஸ் எண்ணெய் தயாரித்து முற்றிலுமாக பிளாஸ்டிக் குப்பையை அகற்ற அரசு, உள்ளாட்சி துறை வாயிலாக திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிப்பு
புதுச்சேரி நகரில் தினமும் 350 டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இவை தற்போது குருமாம்பேட்டில் உள்ள எருக் கிடங்கில் கொட்டி மறுசுழற்சி செய்யப்பட்டு அகற்றப்படுகின்றன. இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றுவது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாகவே மாறி வருகிறது.
இந்த சவாலுக்குத் தீர்வாக, புதுச்சேரி அரசு மற்றும் உள்ளாட்சி துறையின் ஒத்துழைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை பைரோலிசிஸ் தொழில்நுட்பம் மூலம் எண்ணெயாக மாற்றும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடி மதிப்பில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரியாக்டர்களுடன் கூடிய பைரோலிசிஸ் ஆலையை, குரும்பாபேட்டில் "கிரீன் வாரியர்" நிறுவனம் நிறுவியுள்ளது.
தினசரி 60 டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி
தலா 30 டன் திறன் கொண்ட இரு ரியாக்டர்களும் நாளொன்றுக்கு மொத்தமாக 60 டன் பிளாஸ்டிக் கழிவுகளை செயல்படுத்தும் திறனைக் கொண்டவை. ஆரம்ப கட்டமாக, தலா 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள் செலுத்தப்பட்டு மொத்தமாக 30 டன் கழிவுகள் பைரோலிசிஸ் செயற்குழையில் மாறும். இதன் மூலம் தினசரி சுமார் 6 டன் பைரோலிசிஸ் எண்ணெய் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைரோலிசிஸ் என்றால் என்ன?
பைரோலிசிஸ் என்பது ஆக்சிஜன் இல்லாத சூழலில், 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில்செயல்படும் வெப்ப வேதிப்பிளவுச் செயல். இதில், நீளமான ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் உடைந்து, வாயுக்கள் மற்றும் திரவமாக மாறுகின்றன. உருவாகும் திரவம் பைரோலிசிஸ் எண்ணெய் எனப்படும்.
விலை மற்றும் சந்தை
தயாரிக்கப்படும் பைரோலிசிஸ் எண்ணெய், சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறைவு தயாரிப்பு, லிட்டருக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை விற்கப்பட உள்ளது. இதே எண்ணெய் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதால், பிற மாநில தொழிற்சாலைகளும் புதுச்சேரி பக்கம் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருடத்திற்கு 11,000 டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி
இந்த புதிய ஆலையின் மூலம், வருடத்திற்கு குறைந்தது 10,000 முதல் 11,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும். தற்போது ஆலையின் அமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
முழுமையான பிளாஸ்டிக் நிராகரிப்பு இலக்கு
உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:
முன்னதாக குருமாம்பேட்டில் குவிந்திருந்த 10 லட்சம் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். இனி பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை கிடங்கில் சேராமல் தடுப்பதற்காக பைரோலிசிஸ் எண்ணெய் உற்பத்தியை விரைவில் தொடங்கவுள்ளோம். புதுச்சேரியை ‘பூஜ்ய குப்பை’ நோக்கிப் பயணிக்கவைக்கும் இத்திட்டம் வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்கும்.
பயனுள்ள செயல்முறை:
சேகரிப்பு மற்றும் முன் செயலாக்கம்: பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளிலிருந்து பிரித்து, நறுக்கி, உலர்த்தப்படும்.
பைரோலிசிஸ் செயல்: ரியாக்டர்களில் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், ஆக்சிஜன் இல்லாத சூழலில் குப்பைகள் வாயுக்களாக மாற்றப்படும்.
குளிர்த்தல் மற்றும் சேகரிப்பு: வாயுக்கள் கண்டென்சரில் குளிர்ந்து திரவ எண்ணெய்யாக மாறும். குளிராத வாயுக்கள் சில உள் எரிபொருளாக, சில மின்சாரம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். துவக்கத்தில் சிறிது டீசல் தேவைப்படும். ஆனால் அதன் பிறகு, உற்பத்தியில் உருவாகும் வாயுக்களிலிருந்தே ரியாக்டர்கள் இயங்கும். இந்த திட்டம், புதுச்சேரியை பிளாஸ்டிக் குப்பைமில்லா நகரமாக மாற்றும் பயணத்தில் முக்கியமான படியாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் புதிய ஓர் அடையாளம் பதிக்கப் போகிறது.





















