மக்களே உஷார்... வேற வழியே இல்ல... கண்டிப்பா ஹெல்மெட் போடணும் ; அதிரவைக்கும் அபராதம்...!
ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து காவல்துறை.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர்புறம், கிராமப்புற சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் வாகனங்களில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றனர்.
இந்த இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக செல்வதற்காக, வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார், பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இந்த விதிமுறைகளை இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிதளவு கூட கடைபிடிப்பதில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், இரண்டு பேருக்கு மேல் செல்லக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனால், விதிமுறையை மீறி இருசக்கர வாகனங்களில் 4 பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்குவதோடு, தங்களின் உயிரையும் இழக்கின்றனர்.
இதையொட்டி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்புறம், கிராமப்புற மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தலைகவசம் போடாமல் செல்லும் வாகன ஓட்டிகளை முதல் கட்டமாக எச்சரித்தும், பின் 500, 1000 என அபராதம் விதித்தனர். இந்த தலைகவசம் கெடுபிடிக்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், அதிகாரிகள் தங்களின் சோதனை கெடுபிடியை கைவிட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றம் மூலம் மீண்டும் தலைக்கவசம் கட்டாயத்தை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் தலைக்கவசம் சோதனையை தீவிரமாக்கியுள்ளனர்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறை மூலம் இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை, ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 291 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் அபராதமாக 2.78 லட்சம் ரூபாயும், உடனடி அபராதமாக 13 ஆயிரம் ரூபாய் என 2.91 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.