புதுச்சேரி விடுதலை நாள் - காந்தி சதுக்கம் அருகே முதல்வர் என்.ரங்கசாமி கொடியேற்றினார்...!
’’280 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி 1954ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாளை விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது’’
புதுச்சேரி விடுதலை நாள் விழா வையொட்டி முதல்வர் ரங்கசாமி இன்று கொடியேற்றுகிறார். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று பிரெஞ்சு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1ம் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
1962ம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16ம் தேதியாக மாற்றப்பட்டது. புதுச்சேரியின் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1 ஆம் தேதி என்றும் அன்றைய தினத்தையே விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் மாநில அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து புதுச்சேரி அரசின் சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி கடற்கரை சாலையில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்று கொண்டார். இந்த விழாவில் பேரவை தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விடுதலை நாள் விழாவை முன்னிட்டு கடற்கரை சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் குறித்து சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காந்தி திடல் வடக்கு பகுதி பந்தலில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களது வாகனங்களை கேம்பெயின் வீதி, செயிண்ட் மார்டின் வீதி, ரோமன் ரோலண்ட் நூலகம் எதிரில், லா.தே.லோரிஸ்தான் வீதியில் (செயிண்ட் லூயிஸ் வீதியில் இருந்து தலைமை செயலகம் வரை) வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலை மற்றும் நேரு சிலை பின்புறமாக நடந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும்.
காந்தி வீதி தெற்கு பந்தலில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள் துமாஸ் வீதி, பழைய நீதிமன்றம் சந்திப்பில் இருந்து பழைய துறைமுகம் வரையும், சுப்பையா சாலை, பசார் செயிண்ட் லாரண்ட் வீதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலை வழியாக நடந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விடுதலை நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, பாரதி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்