திக் திக் நிமிடங்கள்... ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்... சல்லடை போட்டு தேடும் போலீஸ்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மெயில் மூலமாக மர்ம நபர்கள் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மெயில் மூலமாக மர்ம நபர்கள் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை நிலை ஆளுநர் மாளிகையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ளது துணைநிலை ஆளுநர் மாளிகை. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தற்போது ஆளுநர் மாளிகையில் ஓய்வுவெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகை மின்னஞ்சல் முகவரிக்கு இ-மெயில் மூலமாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உடனடியாக, வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆளுநர் மாளிகை முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள சாலைகள், இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் இருந்துகொண்டே ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்கைதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த 19ம் தேதி புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
இதேபோல் கடந்த வாரம் தலைமை தீயணைப்பு நிலையம் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆளுநர் மாளிகை உள்ளே இருக்கக்கூடிய சூழலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

