சுற்றுலா பயணிகளை கவர புதுச்சேரியில் சொகுசு படகு சேவை தொடக்கம்
புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலாவினர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் தனியார் மூலம் பயணிகள் படகு சேவை தொடங்கியது.
புதுச்சேரி சுற்றுலா பயணிகளை கவர உப்பளம் துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்பாறு வரை புதுச்சேரி கடலில் சொகுசு படகு விடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரையை அழகுபடுத்துதல், செயற்கை மணல் பரப்பினை உருவாக்குதல் என திட்டங்களை தீட்டி வருகிறது. மேலும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களில் தனியார் பங்களிப்பையும் அரசு வரவேற்றுள்ளது. அதன்படி தனியார் நிறுவனத்தினர் புதுவை கடலில் சொகுசு படகு சவாரியை தற்போது தொடங்கி உள்ளனர். இந்த படகு சவாரியானது நாள்தோறும் 2 வேளை நடத்தப்படுகிறது. அதாவது காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும் விடப்படுகிறது. உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் உள்ள உப்பங்கழியில் இருந்து தொடங்கி சுண்ணாம்பாறு வரை படகு விடப்படுகிறது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய 60 இருக்கைகளுடன் கூடிய படகு சகல பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது.
இந்த படகு சவாரியானது நேற்று தொடங்கிய முதல் நாளில் இந்த படகில் 40 பேர் பயணம் செய்தனர். படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு வந்தவுடன் ஜூஸ், படகில் ஏறியதும் சாக்லெட் வழங்கப்படுகிறது. பயணிகள் ஏறியவுடன் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் வழியாக கடல் பகுதியில் படகு நுழைகிறது. அங்கிருந்து பழைய துறைமுகம், சீகல்ஸ், காந்தி சிலை, லைட் அவுஸ், தலைமை செயலகம், பழைய சாராய ஆலை (கன்வென்சன் சென்டர்) சென்று திரும்பி மீண்டும் அதே திசையில் பயணிக்கிறது. முகத்துவார பகுதியில் இருந்து வீராம்பட்டினம் கடற்கரை, சின்னவீராம்பட்டினம், நீலக்கடற்கரை, பாரடைஸ் பீச் வழியாக நல்லவாடு வரை சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேருகிறது. சுமார் 3 மணிநேரம் நடைபெறும் இந்த கடல் பயணத்திற்காக 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகிலேயே கடல் தொடர்பான வீடியோ காட்சிகளும் காட்டப்படுகின்றன.
படகில் இருந்தபடியே புதுவையின் கடற்கரை அழகை ரசிக்கும் விதமாக இந்த பயணம் அமைந்துள்ளது. படகில் மது அருந்துவதற்கு அனுமதி இல்லை. இந்த கடல் பயணத்துக்காக 6 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. www.seagullcruise.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி துறைமுக வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இந்த படகு பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் 5 லட்சம் காப்பீடு வசதியும் செய்துள்ளனர்.
இந்த படகு சவாரி செய்வதற்கான உரிமை ஆணையை சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் படகு உரிமையாளரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.